‘சோயாபீன்ஸ்’ உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்றாகும். மற்ற பருப்பு வகைகளை போலவே எல்லா ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. குறிப்பாக புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.சோயா பீன்ஸ் ஆனது சோயா மாவு, சோயா புரதம், டோஃபு, சோயா பால், சோயா சாஸ் மற்றும் சோயாபீன் எண்ணெய் உள்ளிட்ட வகைகளாக உண்ணப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில், பதப்படுத்தப்பட்ட சோயா பொருட்கள் மிகவும் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். புரதத்தை உருவாக்க தேவையான ஒன்பது அமினோ அமிலங்களும் இதில் உள்ளது. மேலும் இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும், புரதம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்றவை அதிகமாகவும் இடம் பெற்றிருக்கிறது. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் தியாமின் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. மேலும் வேகவைத்த பச்சை சோயாபீன்ஸில் 141 கி கலோரிகள்,12.35 கிராம் புரதம், 6.4 கிராம் கொழுப்பு, 11.05 கிராம் கார்போஹைட்ரேட், 4.2 கிராம் நார்ச்சத்து உள்ளது. சோயா பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
புற்றுநோயை தடுக்கிறது : சோயாபீன்ஸ்களில் காணப்படும் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற ஹார்மோன்களுடன் தொடர்புடைய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் உள்ளவர்கள் தங்களது உணவில் சோயாபீன்ஸ்களை தவறாமல் எடுத்துக் கொண்டால், நல்ல பலனைத்தரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எலும்புகளை பலப்படுத்த : ‘சோயா பீன்ஸ்’ எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சோயா பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்து சோயா பீன்ஸினை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.