லெமன் வாட்டர் என்பது எலுமிச்சை ஜூஸை தண்ணீரில் கலந்து செய்யப்படும் எளிய பானமாகும். லெமன் வாட்டரில் கலக்கப்படும் ஜூஸின் அளவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இந்த பானத்தை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாக எப்படி வேண்டுமானாலும் குடிக்கலாம். சிலர் லெமன் வாட்டருடன் எலுமிச்சைத் தோல், புதினா இலை, தேன், மஞ்சள் அல்லது பிற சுவையூட்டும் பொருட்களை சேர்த்து குடிப்பார்கள்.
கொளுத்தும் கோடை வெயிலுக்கு மிகவும் சுவையாக மற்றும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் பல இந்திய மாநிலங்களில் லெமன் வாட்டர் மிக பிரபலமானது. மற்ற சீசன்களில் தேநீர், காபி அல்லது வேறு ஏதேனும் பழச்சாறு அருந்தி தங்கள் நாளை துவக்கும் மக்களில் பலர், கோடையில் லெமன் வாட்டருடன் தங்கள் நாளை தொடங்க நினைக்கிறார்கள். பொதுவாக லெமன் வாட்டர் சுவையாக மற்றும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், கூடவே பல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
எடை இழப்பு : லெமன் வாட்டர் குடிப்பது உங்கள் நீர் உட்கொள்ளல் அளவை அதிகரிக்க உதவும். எடை இழப்புக்கு உதவும் முக்கிய உத்தியாக அதிக நீர் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது. தவிர இதில் அடங்கி இருக்கும் வைட்டமின் சி, எடை இழப்புக்கு வழிவகுக்கும் கொழுப்புகளின் ஆக்சிஜனேற்றத்திற்கும் உதவுகிறது. எடை குறைக்க விரும்புவோர் காலை வேளையில் லெமன் வாட்டர் குடிப்பது நல்லது. ஏனென்றால் காலை நேரத்தில் வளர்சிதை மாற்றம் உச்சத்தில் இருப்பதால் உடல் எடையை குறைக்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.
ஹைட்ரேஷன் : லெமன் வாட்டர் உடலில் நீர்சத்தை மேம்படுத்துகிறது. வெறுமனே தண்ணீரை குடிப்பது ஒருகட்டத்தில் சலித்து விடும். நீங்கள் தண்ணீரை லெமன் வாட்டர் வடிவில் எடுத்து கொள்ளும் போது தண்ணீர் உட்கொள்ளல் எளிதாகிறது. தவிர லெமன் வாட்டர் உடலில் சோடியம் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் கார்பனேட்டட் பானங்கள் அருந்துவதை குறைக்க லெமன் வாட்டர் உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது : லெமன் வாட்டரை சூடாக அல்லது வெதுவெதுப்பாக அருந்துவது நம் உடலில் மலமிளக்கியாக செயல்படுகிறது. உங்கள் நாளை நீங்கள் வெதுவெதுப்பான லெமன் வாட்டர் குடிப்பதன் மூலம் துவங்கினால் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கவும், குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்கவும் பெரிதும் உதவும். ஆயுர்வேத அடிப்படையில் பார்த்தால் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.
சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்: ஏற்கனவே நாம் குறிப்பித்தது போல எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இது ஆன்டி-ஏஜிங் பண்புகளை கொண்டுள்ளது. லெமன் வாட்டர் உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜனின் அளவை அதிகரிப்பது, பளபளப்பான மற்றும் குறைபாடற்ற சருமத்திற்கு உதவுவது உட்பட எண்ணற்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.