காலை எழுந்ததும் முகத்தை கழுவி விட்டு, முதல் வேலையாக டீ குடித்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பேன் என்று நீங்கள் கூறினால் இந்த பதிவு உங்களுக்கானது. காலையில் எழுந்ததும் எந்த ஒரு வேலை அல்லது உணவையும் சாப்பிடாமல் தேநீர் குடிப்பது பலருக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. அந்த நாளை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவியாக இருக்கிறது.
காலை எழுந்தவுடன் டீ குடிக்க கூடாது என்று சொல்லப்படுவதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம். தேநீரில் காணப்படும் காபின் வயிற்றில் உள்ள அமிலத்தின் உற்பத்தியை தூண்டக்கூடிய தன்மை கொண்டது. இது எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். பெட் டீ என்று சொல்லப்படும் பழக்கத்தை பல இந்தியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். தேநீர் சுவையான மற்றும் ஆறுதல் அளிக்கக்கூடிய பானமாக இருந்தாலும், அதில் காபின் இருப்பதன் காரணமாக அது நம் உடலுக்கு நல்லதல்ல.
கூடுதலாக காலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது, அது நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் கார்ட்டிசால் அளவுகளில் தலையிடுகிறது. தெரியாதவர்களுக்கு, கார்ட்டிசால் என்பது நமது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை ஒழுங்குப்படுத்தி, நம்மை நாள் முழுவதும் ஆற்றல் மிகுந்த நபராக மாற்றக்கூடிய ஒரு ஹார்மோன் ஆகும். காலையில் காபினை அருந்தும் பொழுது, உடலின் கார்ட்டிசால் உற்பத்தி செய்யும் தன்மை குறைகிறது. இதன் காரணமாக நீங்கள் நாள் முழுவதும் சோர்வாகவும், சோம்பேறித்தனமாகவும் உணர்வீர்கள். காலையில் தேநீர் குடிப்பதால் ஏற்படும் முக்கியமான நான்கு உடல் நல பிரச்சனைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
நீர்ச்சத்து இழப்பு : தேநீர் ஒரு டையூரிடிக் என்பதால், டீ குடித்த உடனே அதிகப்படியான நீர்ச்சத்து உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக இரவு முழுவதும் தண்ணீர் இல்லாமல் காலையில் நீர்ச்சத்து பற்றாக்குறை இருக்கக்கூடிய நேரத்தில் நீங்கள் டீ அருந்தும் பொழுது இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.