கோடை காலத்தில் மக்களால் அதிகம் விரும்பப்படும் உணவு வகைகளில் வெள்ளரிக்காய் மிகவும் முக்கியமான ஒன்று. கோடையினால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க உதவுவதோடு, உடனடி புத்துணர்ச்சியும் உடலுக்கு சக்தியையும் அளிக்கிறது. இன்றைய நிலையில் வெள்ளரிக்காயை விதவிதமாக வடிவங்களில் சாலடுகளாகவும் அல்லது உணவுடன் சேர்த்தோ அல்லது வெறும் உப்பு மட்டும் சேர்த்தும் உட்கொள்கின்றனர். சிலர் வெள்ளரிக்காய் சாப்பிடும் போது அதன் தோலை முழுவதுமாக உரித்து சாப்பிடுவார்கள். ஆனால் அடுத்த முறை நீங்கள் வெள்ளரிக்காய் சாப்பிடும் போது அதன் தோலை உரிக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.
அதே சமயத்தில் தோலுடன் வெள்ளரிக்காய் சாப்பிடும் போது அதனை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே உட்கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது கடைகளில் கிடைக்கும் வெள்ளரிக்காயை பதப்படுத்துவதற்காக அதன் மீது மெழுகு பூசப்படுகிறது. இதன் காரணமாகத்தான் வெள்ளரிக்காய் சாப்பிடுவதற்கு முன் நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே உட்கொள்ள வேண்டும். சுடுநீரில் வெள்ளரிக்காயை கழுவுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மெழுகில் இருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கும்.
வெள்ளரிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் இவற்றை தவிர வேறு பல ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. மேலும் நமது செரிமானத்தை அதிகப்படுத்தக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றைத் தவிர வெள்ளரிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நமது உடலில் உள்ள செல்கள் சேதம் அடைவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
பொதுவாகவே வெள்ளரிக்காயை சாலட், ரைத்தா மற்றும் ஜூஸாக அதிகம் உட்கொள்கின்றனர். சிலர் எந்தவித மசாலாக்களும் சேர்க்காமல் வெறும் வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடுவதையே அதிகம் விரும்புவார்கள். குறிப்பாக வெயில் காலங்களில் இவை அதிகம் கிடைக்கின்றன. முடிந்த அளவு போதுமான அளவு வெள்ளரிக்காய்கலை இந்த கோடை காலத்தில் உட்கொள்வது அதிக நன்மைகளை கொடுக்கும். தினசரி நாம் வெள்ளரிக்காய் உட்கொண்டால் நமது உடலில் நீர் சத்து குறைபாடு வராது என்பது குறிப்பிடத்தக்கது.