இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சற்று கூடுதலாகவே கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவு வகைகள் மிகவும் அரிதாகவும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு வகைகள் மிக எளிதிலும் கிடைக்கும் படி தான் இன்றைய சூழ்நிலை உள்ளது. ஆனாலும் இது போன்ற சவால்களை எல்லாம் தாண்டி நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவு வகைகளை நாம் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
தாவர உணவுகளை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்ற கருத்தும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள் மற்றும் வேறு பல தாவர உணவு வகைகளில் நார் சத்து அதிகமாகவும் கொழுப்பு சத்து குறைவாகவும் உள்ளது. இவ்வாறு தாவர உணவு உட்கொள்வதால் நமக்கு என்னென்ன விதமான நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்
இதயத்திற்கு நன்மை தரக்கூடியது : தாவர உணவு வகைகள் பொதுவாகவே அழற்சி தன்மைக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும் இவற்றால் நமது இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. சர்க்கரை அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு சத்து அதிகமாகவும், அழற்சி தன்மை அதிக அளவும் இருக்கும். இவை நமது இதயத்திற்கு அதிக கெடுதல் தரக்கூடியது. தாவர உணவை உட்கொள்ளும் போது அவற்றில் தேவையான அளவு நார் சத்தும், கொழுப்புகள் மிக குறைவாகவும் உள்ளதால் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது : தாவர உணவுகளை உட்கொள்ளும் போது அவை நமது உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரித்து நமது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பச்சை காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அதிகரித்து நமது செரிமானத்திற்கு உதவுகிறது. நமது குடல் ஆரோக்கியமாக இருந்தாலே அவை நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து விடும். மேலும் உடல் பருமனை குறைப்பதுடன் நமது குடலின் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்தமாக அதிகரிக்கிறது.
உடலுக்கு கெடுதல் தரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது : தினசரி உணவில் தாவர உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளும் போது அவை நமது உடலில் உள்ள கெடுதல் தரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. உடலுக்கு கெடுதல் தரும் கொழுப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் இதயக் கோளாறு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பலவிதமான நோய்கள் ஏற்படலாம். எனவே நீங்கள் தாவர உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வது தவிர்க்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : தாவர உணவை நீங்கள் உட்கொள்ளும் போது அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலினால் கிரகிக்கப்படுகின்றன. இதன் காரணமாக அவற்றில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவையும் உடலினால் கிரகிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் தாவரங்களில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையை அதிகம் நிறைந்துள்ளதால் அவை நோய் தொற்றுகளுடன் போராடுவதற்கு உதவுகிறது.