எந்த வயதினர் என்றாலும் நம் உடலை ஆரோக்கியமானதாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சீரான உணவுகளையும், ஊட்டசத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது அவசியம். நாம் நடுத்தர வயது உடையவராக இருந்தால், நாம் விரும்பியது அனைத்தையும் சாப்பிட்டுக் கொண்டிருப்போம். ஆனால், வயது ஆகும் போதும் பல்வேறு காரணங்களால் நமது உணவுப் பழக்க வழக்கங்களில் ஏராளமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.
பற்கள் கொட்டிடுச்சு : வயதான காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு பற்கள் கொட்டிவிடும். குறைந்தபட்சம் கடித்துச் சுவைப்பதற்குத் தேவையான கடவாய் பற்கள் இருக்காது. அத்தகைய சூழலில், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் கூட, சில உணவுகளை சாப்பிட முடியாது. இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அந்தக் கவலைகளை புறந்தள்ளிவிட்டு, உங்கள் வாய்க்கு ஏற்ற வகையில் எளிதாக சாப்பிடக் கூடிய சத்தான உணவுகள் குறித்து இந்த செய்தி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
மசித்த உருளைக்கிழங்கு : உடல் ஆற்றலுக்கு பெரிதும் தேவைப்படுகின்ற நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து ஆகியவை நிரம்பிய உருளைக்கிழங்கு உங்கள் வயதுக்கு ஏற்ற உணவாகும். உருளைக்கிழங்கை அதன் தோளுடன் சேர்த்து சாப்பிட்டால், கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஜீரண சக்தி மேம்படும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து, அதனுடன் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து ஃபிரை செய்து சாப்பிடலாம். மசாலா, வெங்காயம், தக்காளி, உப்பு போன்றவற்றை இதனுடன் சேர்த்துக் கொண்டால் எந்த உணவுக்கும் ஏற்ற சைட் டிஷ் தயார் ஆகிவிடும்.
பழக்கூழ் / ஸ்மூத்தி : பழங்கள் என்னதான் மிருதுவாக இருந்தாலும், அதை மென்று தின்பதற்குப் பற்கள் தேவை. இதனால், பல் இல்லாத மக்கள் பலர் பழம் சாப்பிடுவதையே நிறுத்தி விடுகின்றனர். இருப்பினும், ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது அவசியம். பழங்களை நீங்கள் ஜூஸ் போல எடுத்துக் கொள்ளும்போது அதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும். ஸ்மூத்தி என்னும் பழக்கூழ் போல சாப்பிட்டு வந்தால் எந்த சத்தும் குறையாது. வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை இதுபோல எடுத்துக் கொள்ளலாம்.
காய்கறி சூப் : உங்கள் நாவுக்கு இதமான சூட்டில் எண்ணற்ற சத்துக்களை சூப் வகைகள் வழங்குகிறது. மெல்லுவதற்கு கடினமான காய்கறி வகைகளை நீங்கள் முற்றாக புறம்தள்ளி விடாமல், அவற்றை வேகவைத்து சூப் போல எடுத்துக் கொள்வதால் உங்கள் உடலுக்கு தேவையான அடிப்படையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். சூப் சுவையாகவும் இருக்கும்.
முட்டைகள் : உடலுக்கு வலுவூட்ட தேவையான புரதம் மற்றும் விட்டமின்கள் ஆகியவை முட்டைகளில் நிரம்பியுள்ளன. முட்டையை நீங்கள் அவித்து சாப்பிடலாம் அல்லது பொறித்து எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சுவையாக வேண்டும் என்றால் ஆம்லெட் போலவும் சாப்பிடலாம். தினமும் சில முட்டைகள் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான சத்தும் கிடைக்கும்.