சர்க்கரை வியாதி இன்று மிகப்பெரும் அளவில் அனைவரையும் பாதித்து வருகிறது. முன்னர் மத்திம வயதில் இருந்தவர்களை மட்டும் தாக்கிய இந்த வியாதியானது தற்போது இளம் வயதினருக்கு கூட சர்வசாதாரணமாக ஏற்பட்டு விடுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத போது அது சர்க்கரை வியாதியை ஏற்படுத்தி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பியல் மண்டலம், மற்றும் உடல் முழுவதையும் பாதிக்கிறது.
என்னதான் அலோபதி மருந்துகளில் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த பலவித மாத்திரை மருந்துகள் இருந்தாலும் அவற்றால் பல பக்க விளைவுகளும் ஏற்படும் என்பதை யாரும் மறக்க முடியாது. எனவே இயற்கை முறையில் அன்றாடம் பயன்படுத்தும் சில மூலிகைகளை வைத்து சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
வெந்தயம் : இந்தியாவில் இயற்கை மருத்துவ முறையில் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த வெந்தயம் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. அதில் உள்ள அமினோ அமிலங்களும் உடலுக்கு நன்மை அளிக்கும் ஊட்டச்சத்துக்களும், நார் சத்து ஆல்கலாயிட்ஸ் மற்றும் சாப்போனின் ஆகியவைகள் உடலுக்கு நன்மை அளிக்கின்றன. வெந்தயத்தில் 50% வரை நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. வெந்தயத்தை உண்பதால் உணவிற்கு பிறகு உடலில் கார்போஹைட்ரேடுகள் பெருமளவு கிரகித்துக் கொள்வதை இது தடுக்கிறது.
சீந்தில் : அமிர்தவல்லி எனப்படும் இந்த சீந்தில் மூலிகையானது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இது உதவுகிறது. உடலில் குளுக்கோசை கட்டுபடுத்துவத்தின் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த மூலிகையை வெறுமனே அல்லது ஜூஸாகவும் பவுடராகவும் மாற்றி உட்கொள்ளலாம்.
வேம்பு : இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் வேப்பிலை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வேப்பிலைகள் நன்றாக அரைக்கப்பட்டு நீருடன் சேர்த்து கொதிக்க வைக்கப்படுகிறது. அதன் பின்பு அது வடிகட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. குளுக்கோசினால் ஏற்படும் ஹைப்பர்கிளைசிமியா என்பதை கட்டுப்படுத்த சிறந்த மூலிகையாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது.
நெல்லிக்காய் : நெல்லிக்காய் இயல்பாகவே உடலின் நோய் எதிர்ப்பு திறனை மிகவும் அதிகரிப்பதாக பலர் தெரிவித்துள்ளனர் முக்கியமாக தலை முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. நெல்லிக்காயில் மிக அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் சர்க்கரை வியாதியை எதிர்த்து போராடுவதற்கு நெல்லிக்காய் சிறந்த தேர்வாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதன் இலையானது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இயற்கை மருத்துவத்தில் நெல்லிக்காய் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.