நம்மில் பலரும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என அழைக்கப்படும் இடைப்பட்ட விரதத்தை பற்றி கண்டிப்பாக அறிந்திருப்போம். ஒருவேளை உணவுக்கும், அடுத்த வேளை உணவுக்கும் இடையே மிக நீண்ட இடைவெளியை கடைப்பிடிப்பதுதான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறை ஆகும். அதாவது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்களிலேயோ எந்தவித உணவும் உட்கொள்ளாமல் குறைந்தபட்சம் நீர் ஆதாரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு இருப்பது இடைப்பட்ட விரதம் என அழைக்கப்படுகிறது.
இந்த விரத முறையை கடைபிடிப்பதால் உண்மையிலேயே நமது உடலுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன என்பதை மறுக்க முடியாது. முக்கியமாக நமது உடலில் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் தினசரி நாம் உட்கொள்ளும் உணவை செரிமானம் செய்வதிலிருந்து, ஊட்டச்சத்துக்களை கிரகித்து உடலுக்கான சக்தியை அளிப்பது வரை பலதரப்பட்ட வேலைகளை செய்கின்றன.
இந்த இடைப்பட்ட விரத முறையினால் நமது வயிற்றில் வளரும் நுண்ணுயிர்களின் கலவையில் மாற்றம் உண்டாகிறது. அதாவது செரிமான பாதையில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களான பைபிடோபாக்டீரியம் மற்றும் லாக்டோபாசிலர்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைக்கும் பாக்டீரியாக்களான க்ளோஸ்ட்ரிடியம் மற்றும் புரோட்டியம் பாக்டீரியா ஆகியவற்றின் எண்ணிக்கையை குறைக்கிறது. இந்த மாற்றத்தினால் நமது செரிமான பாதையில் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
இடைப்பட்ட விரதத்தினால் நமது உடலில் செரிமான பாதையின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இவை நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் ஆகி, குடலின் வழியே அவை நகர்வதன் இயக்கத்தையும் அதிகரிக்க உதவுகிறது. இதற்குக் காரணம் விரத முறையினால் நமது உடலில் குடலின் இயக்கத்தை அதிகரிக்க கூடிய ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கப்பட்டு அவை செரிமானத்தை ஊக்கப்படுத்துகின்றன. இதனால் மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இடைப்பட்ட விரத முறையை நாம் கடைப்பிடிப்பதால் நமது செரிமான பாதையில் உள்ள நுண்ணுயிர்கள் ஆரோக்கியம் அதிகரிக்க உதவுகிறது. இதனால் நமது உணவு நன்றாக செரிமானம் ஆவதுடன் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதிலுமிருந்து நம்மை பாதுகாக்கிறது. அதே சமயத்தில் இந்த இடைப்பட்ட விரத முறையானது அனைவருக்கும் ஏற்றதல்ல என்பதும் முக்கியமானது அவரவர் உடல் நிலையை பொறுத்து மருத்துவரின் ஆலோசனையுடன் விரதத்தை கடைப்பிடிக்கலாம்.