அற்புதங்களை செய்ய கூடிய வல்லமை கொண்டது சாமந்தி பூ வகையைச் சேர்ந்த கெமோமில் (Chamomile) என்கிற பூ. இயற்கையிலேயே இந்த கெமோமில் பூவானது எண்ணற்ற மருத்துவ பயன்களை நமக்கு தருகிறது. இந்த பூக்களை டீ-யில் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமாக நன்மைகளை பெற முடியும். கெமோமில் டீ குடிப்பது ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு தேவையற்ற பதற்றத்தை தணித்து ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது.
கிரீன் டீ, பிளாக் டீ போலவே இந்த கெமோமில் டீ-யானது ஆரோக்கிய நோக்கங்களுக்காக மக்கள் விரும்பும் பொதுவான பானமாக இருந்து வருகிறது. கெமோமில் டீ தயாரிக்க கெமோமில் பூக்கள் நன்கு காய வைத்து உலர வைத்து பின் பயன்படுத்தப்படுகிறது. சுடு தண்ணீரில் அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு டீ தயாரித்து மக்கள் அருந்துகின்றனர். மக்களில் பலர் பிளாக் அல்லது கிரீன் டீ-க்கு பதில் காஃபின்-ஃப்ரீ யாக இருக்கும் கெமோமில் டீயை விரும்பி அருந்துகின்றனர். கெமோமில் டீ உண்மையில் எவ்வளவு ஆரோக்கியமானது மற்றும் இது தரும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம். வழக்கமாக கெமோமில் டீ குடிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்..
தூக்கத்தின் தரம் மேம்படும் : ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்ல தூக்கம் முக்கியம். கெமோமில் மலர்களை காய வைத்து பின் ஹயாரிக்கப்படும் டீ-யானது நம்முடைய நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளை அமைதியடைய செய்வதால் தூக்கத்தை தூண்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே தூங்க செல்வதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் ஒரு கப் கெமோமில் டீ பருகுவது இரவு நிம்மதியான மற்றும் தரமான தூக்கத்திற்கு உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : கெமோமைலின் பல நன்மைகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில், கெமோமில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. இது நோயைத் தடுக்கவும், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
கேன்சரை எதிர்த்து போராட உதவலாம் : கெமோமில் டீ-யில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சில வகையான புற்றுநோய்கள் உருவாகும் குறைவான நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கெமோமில் பூக்களில் apigenin என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. டெஸ்ட் - ட்யூப் ஆய்வுகளில் இந்த apigenin புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மார்பகம், செரிமானப் பாதை, தோல், புரோஸ்டேட் மற்றும் கருப்பை கேன்சர் செல்களை எதிர்த்து போராடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதய ஆரோக்கியம் : கெமோமில் பூக்கள் உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்ட ஃபிளாவோன்ஸ்களை (flavones) கொண்டுள்ளது. மேலும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் வகையில் அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன. இவை தவிர சரும ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க கெமோமில் நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கெமோமில் டீ எப்போதும் ஒரு ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. பூ கிடைக்கவில்லை என்றாலும், இந்த பூவின் பவுடர்கள் சில நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கின்றன.