இன்றைய அவசர உலகில், நேர சேமிப்பு கருதி பலரும் குக்கரில் சோறு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். அதே சமயம், இன்னும் பலர் பாரம்பரிய முறைப்படி பானையில் அரிசியை வேகவைத்து, கஞ்சித் தண்ணீரை வடித்த பின் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபோல வடிக்கப்படும் கஞ்சித் தண்ணீரில் ஸ்டார்ச் சத்து மிகுதியாக இருக்கும். பெரும்பாலும் அதை எதற்கும் பயன்படுத்தாமல் கீழே கொட்டி விடுவது அல்லது மாடுகளுக்கு வைப்பது நம் வழக்கமாக இருக்கிறது.
சலவை செய்ய பயன்படுத்தலாம் : ஆடைகளை சலவை செய்து உடுத்தும்போது, அவை மடமடவென்று இருப்பதை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக வெள்ளை வேட்டி, சட்டை, பிளைன் சட்டை, கதர் ஆடைகள் போன்றவற்றை அணிபவர்கள் இத்தகைய அனுபவத்தை விரும்புகின்றனர். ஆக உங்கள் ஆடைகளை துவைத்த பிறகு, அவற்றை இந்த கஞ்சித் தண்ணீரில் நனைத்து, பிழிந்து காய வைத்தால் போதுமானது. எதிர்பார்த்த மடமடப்பு கிடைக்கும்.
சுத்தம் செய்ய பயன்படும் : கஞ்சித் தண்ணீருடன் பேக்கிங் சோடா, உப்பு போன்றவற்றை கலந்து வீடுகளில் தரைப்பகுதியை சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வீட்டை சுத்தம் செய்யும்போது பளபளப்பாக, கிளாஸ் போன்றதொரு தோற்றம் கிடைக்கும். வீட்டை துடைத்து முடித்த பிறகு, ஒரு ஸ்பிரே வைத்து இந்த கலவையை தெளித்து, துடைத்து விடலாம்.
சோர்வான தருணங்களில் அருந்தலாம் : உடல்நலன் பாதிப்பு அல்லது மிகுந்த கடினமான வேலை போன்ற தருணங்களில் நம் உடல் சோர்வடையும்போது கஞ்சித் தண்ணீர் அருந்தினால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். கொஞ்சம் மோர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூப் போல அருந்தலாம். உடற்பயிற்சி செய்யும் தருணங்களில் ஆற்றல் கிடைக்க இவ்வாறு பருகலாம்.
முக அழகுக்கு பயன்படும் : கஞ்சித் தண்ணீர் வடித்த சில நிமிடங்களில் கெட்டியாக கேக் போல மாறிவிடும். அதை வெயிலில் காய வைக்கலாம் அல்லது பாத்திரத்தில் லேசான சூட்டில் கிண்டலாம். பின்னர் அதை பவுடராக மாற்றி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்தலாம். சருமத்தில் அப்ளை செய்தால் மென்மையான தோற்றம் கிடைக்கும்.