பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகவும் கடினமான காலங்களில் ஒன்று மெனோபாஸ்! மாதவிடாய் சுழற்சி நிற்கும் காலத்தில் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன்களின் தீவிரமான ஏற்றத்தாழ்வு பெண்களின் உடல் மற்றும் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எப்பொழுதுமே எரிச்சலான மனநிலை, எடை அதிகரிப்பு, கவனச்சிதறல், வியர்த்துக் கொட்டுவது, என்று பலவித பிரச்சினைகளால் அன்றாட வேலைகளைக் கூட சரியாக செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்படுவார்கள்.
மெனோபாஸ் காலத்தை சரியாக எதிர்கொள்வதற்கு குடும்பத்தினரின் ஆதரவு, மருத்துவ ஆலோசனை, சப்ளிமென்ட்கள் மட்டுமல்லாமல், உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஹார்மோன்கள் உடலில் மிகப்பெரிய மாற்றம் அடைவதால், உடல் அதை பேலன்ஸ் செய்யும் அளவுக்கு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மெனோபாஸ் காலத்தை ஓரளவுக்கு எளிதாக எதிர்கொள்ள முடியும். மெனோபாஸ் காலத்தில் பெண்கள் இந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்!
சோயா : மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு மிகச்சிறந்த உணவு சோயா. சோயாவில் இயற்கையாகவே தாவர அடிப்படையிலான பைட்டோ-ஈஸ்ட்ரோஜன் என்ற ஈஸ்ட்ரஜன் காம்பவுண்ட் இருக்கிறது. மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு பொதுவாகவே ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் அதுமட்டுமில்லாமல் எலும்புகளின் ஆரோக்கியமும் அடர்த்தியும் குறையத் துவங்கும். இந்த இரண்டையுமே சோயாவில் இருக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சரி செய்கிறது.
ஆளிவிதைகள் : சமீப காலமாக சூப்பர்ஃபுட் என்று பரவலாக பயன்படுத்தவும் ஆளி விதையில் பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல பண்புகள் உள்ளன. உடலில் ஏற்படும் அழற்சி, நீர்த்தேக்கம், மன அழுத்தம் மற்றும் எரிச்சலான மனநிலை ஆகிய அனைத்தையுமே சரி செய்யக்கூடிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அதாவது ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி அமிலங்கள் இந்த ஆளி விதையில் நிறைந்துள்ளது. மெனோபாஸ் அறிகுறிகளான ஹாட்ஃபிளாஷ், வியர்த்து போகுதல் மற்றும் பெண் உறுப்பு ட்ரை ஆகுதல் ஆகிய அனைத்து அறிகுறிகளையும் குறைத்து மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
பாதாம் : வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த பாதாம் மெனோபாஸ் அறிகுறிகளை குறைப்பதற்கு பெண்களுக்கு உதவியாக இருக்கும். பாதாமில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருக்கிறது. எனவே குறைந்த ஈஸ்ட்ரஜன் அளவால் ஏற்படக்கூடிய பாதிப்பை இந்த கொழுப்பு சரி செய்யும். அதுமட்டுமல்லாமல் வாஸ்குலார் ஆரோக்கியத்தையும் இதிலிருக்கும் மக்னீசியம், விட்டமின் இ மற்றும் ரிபோஃபலாவின் ஆகிய சத்துக்கள் பேலன்ஸ் செய்யும்.
பருப்பு வகைகள் : ஹார்மோன் பாதிப்புகள் அல்லது உடல் நலக் கோளாறு என்று பிரச்சனை ஏற்படும் போது, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது, அடிப்படையாக சில உணவுகளை மறந்து விடுகிறோம். அந்த அடிப்படை உணவுகளிலேயே உடல் கோளாறை அல்லது பிரச்சனையை சரிசெய்யக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மெனோபாஸ் பெண்களுக்கு கைகொடுக்கக் கூடிய உணவுகளில் ஒன்று தான் பருப்பு வகைகள்! அறிகுறிகளை குறைக்க, மற்றும் ஹார்மோன்களை சுழற்சியை சரி செய்யக்கூடிய ஐசோஃப்ளேவோன் என்ற நியூட்ரியன்ட் பருப்பு வகைகளில் உள்ளது.
ஸ்பைருலினா : இயற்கையின் அற்புதங்களில் ஒன்றா ஸ்பைருலினாவில் பல விதமான ஹீலிங் குணங்கள் உள்ளன. ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் குறைபாட்டை சரி செய்யும் காமா-லினோலெனிக் என்ற ஒரு ஃபேட்டி ஆசிட் இதில் உள்ளது. அது மட்டுமில்லாமல், கடல் பாசி ஊட்டச்சத்து நிறைந்த உணவும் கூட. இதில் அரிதாகக் கிடைக்கும் க்லோரோஃபில், மாக்னேசியம், கேல்சியம், இருப்புச் சத்து மற்றும் பீட்டா கரோடீன் உள்ளன. இது சைவ உணவு மற்றும் வீகன் உணவு சாப்பிடுவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவாகும்.