நெய் இல்லாத இந்திய சமையலறையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு எல்லா வித உணவுகளிலும் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. தால் போன்ற எளிய உணவும் கூட நெய் சேர்த்து தான் தயாரிக்கப்படுகிறது. சப்பாத்தியில் நெய் பயன்படுத்தாமல் இருந்தால், அது சுவையற்றதாகவே மாறிவிடும். இப்படி பல ஆண்டுகளாக, நெய் என்பது இந்திய உணவில் மிக முக்கிய அங்கம் வகித்து வருகிறது. அதே போன்று, உணவுகளில் நெய் சேர்த்து கொள்வதால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது என்று கூறினாலும், மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர்கள் பலரும் இதில் உள்ள பாதிப்புகள் பற்றியும் குறிப்பிடுகின்றனர். அவந்தி தேஷ்பாண்டே என்கிற ஊட்டச்சத்து நிபுணர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது தொடர்பாக ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அதில் எல்லா வகையான உணவிலும் ஏன் நெய் சேர்க்கக்கூடாது என்பதையும் விளக்கி உள்ளார்.
நெய் என்பது ஒரு நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவு பொருளாகும். இது நம் உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது, எனவே நெய்யை அதிகமாக உட்கொண்டால் இதயத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். மேலும் இது குறித்து சிலவற்றை விளக்குகிறார். "ஒவ்வொரு உணவிலும் நெய்யை நீங்கள் சேர்த்து கொள்கிறீர்களா?" என்று அவரது பதிவின் தலைப்பைத் தொடங்கி உள்ளார். "மேலும் நெய் ஒரு நிறைவுற்ற கொழுப்பாக இருப்பதால் அது மொத்த கொழுப்பு மற்றும் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது, இது அதிகமாக உட்கொண்டால் இதயத்திற்கு நல்லதல்ல" என்று விளக்கியுள்ளார்.
நெய் என்பது மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவு பொருளாகும். எனவே இதை எல்லா வகையான உணவிலும் சேர்த்து கொள்வதால் பலவித பாதிப்புகள் உண்டாகும். "நிறைவுற்ற கொழுப்புகளுடன், மோனோசாச்சுரேட்டட் (MUFA) மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (PUFA) மிதமாக உட்கொள்ளப்பட வேண்டும், இதை பின்பற்றுவது தான் இதய ஆரோக்கித்திற்கு நல்லது. மேலும் இந்த முறை தான் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன" என்று அவந்தி குறிப்பிட்டுள்ளார்.
சமைக்கும் போது நெய்க்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய சில ஆரோக்கியமான மாற்றுகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். "MUFA நிறைந்த நிலக்கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்களை சமையலுக்கு சேர்த்து கொள்ளலாம். அதே போன்று சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் ஆகியவற்றில் PUFA என்பது அதிக அளவில் உள்ளது" என்று அவர் கூறுகிறார். உங்கள் உடலில் சரியான அளவு கொழுப்பைப் பராமரிக்க, நெய்யில் சமைப்பதற்குப் பதிலாக மேற்சொன்ன ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்தலாம். மேலும் இவற்றை தால், சாதம் மற்றும் சப்பாத்தியிலும் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக நெய் பிரியர்கள் இந்த ஆலோசனையை பின்பற்றுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.