தென்னிந்திய உணவு முறைகள் அல்லது சமையற்கலை என்று வரும் பொழுது, பரவலாக இட்லி, தோசை, மீன் உணவுகள், குழம்பு வகைகள் ஆகியவை தான் கண் முன் தோன்றும். ஆனால் தென்னிந்திய உணவு வகைகள் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப பலவிதமாக இருக்கிறது. உதாரணமாக தமிழ்நாட்டு உணவு முறை, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது வேறுபாடும். கேரளாவில் மீனும் தேங்காயும் அதிகமாக சமையலில் சேர்க்கப்படும். கர்நாடகாவில் கிட்டத்தட்ட எல்லா உணவுகளிலுமே லேசான இனிப்பு சுவைக்காக வெல்லம் சேர்க்கப்படும். ஆந்திரா காரம் பற்றி சொல்லவே தேவையில்லை. இதேபோல ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென்று குறிப்பிட்ட சில உணவு பழக்கங்கள் அல்லது சமையல் கலை முறை இருந்து வந்தாலும் அந்தந்த மாநிலத்துக்குள் இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளில், சமூகங்களில் பாரம்பரியமாக ஒரு சில சமையல் பழக்க வழக்கங்கள் தொன்று தொட்டு இருந்து வருகிறது. தென்னிந்திய உணவு முறைகளில் ஏகப்பட்ட வகைகள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில பரவலாக அறியப்படவில்லை. அந்தப் பட்டியல் இங்கே.
செட்டிநாடு உணவுகள்: இது தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வகையாகும். காரைக்குடி என்ற ஊரில் பாரம்பரியமாக இருந்து வரும் சமையல் முறை செட்டிநாட்டு உணவாகும். செட்டிநாட்டு உணவுகளில் நிறைய மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. செட்டிநாடு சமையலில் ஏகப்பட்ட சைவ உணவுகள் மட்டுமின்றி, அசைவ உணவுகளும் இடம்பெறும். ஏகப்பட்ட மசாலா சேர்க்கப்பட்ட குழம்புகள் மற்றும் இறைச்சி வகைகள் உள்ளன. மற்ற தென்னிந்திய உணவு வகைகளை விட, செட்டிநாடு உணவுகள் தனித்துவமாக இருப்பதற்கு காரணம், சமைக்கும் போது சேர்க்கப்படும் புதிதாக அரைக்கப்பட்ட மசாலா பொருட்கள் ஆகும்.
தாம்ப்ராம் உணவுகள்: தமிழ்நாட்டு வாழ் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களின் உணவுகள் தாம்ப்ராம் உணவுகள் என்று சுருக்கமாகக் கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க சைவ உணவாகும். பல்வேறு உணவு வகைகளில் விதவிதமாக காய்கறிகள் பயன்படுத்தப்படும். கிச்சடி, கலந்த சாதம் வகைகள், பாயசம், காய்கறிகளில் செய்யப்படும் கூட்டு, ஊறுகாய் மற்றும் வற்றல் குழம்பு வகைகள் பிரதானமானவை. சுவை, வெரைட்டி, ஊட்டச்சத்து ஆகிய மூன்றும் இந்த வகை உணவுகளில் அதிகம் காணப்படும். அது மட்டுமின்றி, பெரும்பாலும், உணவில் அறுசுவையும் இருக்கும்.
மலபார் உணவுகள்: கேரளா மாநிலத்தில் ஒரு பிரதான பகுதியான மலபார் உணவுகள் அந்த பிரதேசம் தவிர்த்து அதிகமாக அறியப்படாத உணவாகும். கண்ணூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகள் மலபார் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. மலபாரி உணவுகள், கிராமப்புறங்களில் சமைக்கப்படுவது போலவே சமைக்கப்படும். மலைபிரதேசங்களாக இருப்பதால், இறைச்சி உணவுகள் அதிகமாகவும், ஏலக்காய், மிளகு, இஞ்சி, இலவங்கள் ஆகிய மசாலா பொருட்கள் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும்.
கூர்க் உணவுகள்: மலைவாழ் பிரதேசமான கூர்க் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. சுற்றுலா வாசிகளின் சொர்க்கமாக கருதப்படும் கூர்க், மலைவாழ் மக்களின் வசிப்படமாகவும் இருக்கிறது. இதனாலேயே, இவர்களின் உணவு தனித்துவமாக கானப்படுகிறது. அரிசியில் செய்யப்படும் அக்கி ரொட்டி மற்றும் அசைவ உணவுகள் இவர்களின் பாரம்பரிய உணவாகும். பறவைகள், மான் மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாடி, விதவிதமான இறைச்சி உணவுகளை சாப்பிடும் பழக்கம் உண்டு.