வேர்க்கடலை ஊற வைத்து சாப்பிடுவதை சிலர் தவிர்க்கலாம். ஆனால் அப்படி சாப்பிடச் சொல்வதற்கு பின்னால் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா..? வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த கொட்டைகள் பீட்டா-சிட்டோஸ்டெரால் (beta-sitosterol) நிரம்பியுள்ளன. இது புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது : வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது. புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுகிறது. வேர்க்கடலையை வாரத்திற்கு மூன்று முறை, எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும், புற்றுநோய் அபாயத்தை 58 சதவீதம் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எடை குறைக்க உதவுகிறது : வேர்க்கடலை புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல கலவை என்பது தெரியுமா? இந்த ஊட்டச்சத்துக்களால், வேர்க்கடலை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்கும். இது, அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. அவற்றை அளவாகச் சாப்பிட்டால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும்.
செரிமானம் அதிகரிக்கும் : வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், எரிச்சலூட்டும் குடல் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும். அதற்கு நீங்கள் தினமும் 6-7 வேர்க்கடலையை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட செரிமானப் பிரச்னை ,குடல் அழற்சி பிரச்னை, மலச்சிக்கல் என வயிறு தொடர்பான பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.