

இந்தியக் கிட்சன்களில் எந்த மசாலா டப்பாவைத் திறந்தாலும் அதில் மருத்துவ குணங்கள்தான் நிறைந்திருக்கும். அந்த வகையில் பெண்கள் அசைவ உணவு, காரசாரமான மசாலா சேர்த்த உணவுகளுக்கு கசகாசாவையும் கட்டாயம் சேர்ப்பார்கள். ஆனால் அதுவும் சுவைக்காக அல்ல...அதிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு நிறைய ஆரோக்கியம் உண்டு. அவை என்னென்ன பார்க்கலாம்.


இதய ஆரோக்கியம் : ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது இதயம்தான். இது ஆரோக்கியமற்ற கொழுப்பு, எண்ணெய் போன்ற ஆபத்துகளால் பாதிப்பை உண்டாக்குகிறது. இருப்பினும் வீட்டு உணவுகளில் கசகசா சேர்ப்பதால் அதில் இருக்கும் நார்ச்சத்து கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இரும்புச்சத்தும் அதிமமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். இதயத்திற்குத் தேவையான இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.


செரிமானம் : பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் இன்றைய தலைமுறை அதிகம் பாதிக்கப்படுவது செரிமானமின்மை பிரச்னையால்தான். எனவே இதை தவிர்க்க அதிக நார்ச்சத்து நிறைந்த கசகசாவை உணவில் சேர்ப்பதால் இந்த பிரச்னையை தவிர்க்கலாம். அதோடு மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் இது சரி செய்துவிடும்.


தூக்கமின்மை : பலரிடமும் அதிகமாக கேட்கும் வார்த்தை நிம்மதியாக தூங்கி பல மாதங்கள் ஆகிறது என்பதுதான். தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னை, அலுவலக வாழ்க்கையில் பிரச்னை அல்லது வாழ்க்கை முறை இப்படி பல காரணங்களால் தூக்கமின்மை பலரிடத்தில் அதிகரித்துவிட்டது. அதற்கும் கசகசாவில் மருத்துவம் உள்ளது. இதில் இருக்கும் மெக்னீசியம் மன அழுத்தத்தை உண்டாக்கும் நெகடிவ் ஹார்மோனான கார்டிசோலின் சுரப்பை குறைக்கிறது. இதனால் எந்த தவறான சிந்தனைகள், எண்ணங்களின்றி நிம்மதியாக தூங்கலாம்.


எலும்பு ஆரோக்கியம் : எலும்புப் புரை, பலவீனமான எலும்புகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என ஆய்வு கூறுகிறது. அதற்கு ஆரோக்கியமான உணவுகளை பழக்கப்படுத்துவதுதான் தீர்வாக இருக்கும். அப்படி கசகசாவில் எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் சத்து அதிகமாகவே உள்ளது. எனவே உணவில் அடுத்தமுறை கசகசா சேர்க்க மறந்துவிடாதீர்கள்.


பெண்கள் கருத்தரித்தல் : கருத்தரிக்க முடியாமல் எண்ணற்ற பெண்களும் ஆண்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இனி கசகசாவை தினமும் உணவில் சேர்க்க மாற்றத்தை உணரலாம். ஏனெனில் கசகசா ஃபலோபியன் குழாயில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதிலும் அதோடு இனப்பெருக்க முட்டைகள் தடைகளின்றி பயணிக்கவும் உதவுகிறது. கருப்பையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் பெண்களின் பாலியல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.