கோடைப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள் யாவும் இனிப்பாகவும், புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும். இதில், மாம்பழத்திற்கு தான் நம்பர் 1 இடம். நீங்கள் சாப்பிட்டு முடித்த பிறகும் கூட நாவில் சுவை ஒட்டிக் கொண்டிருக்கும். இதேபோல, சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடித்த மற்றொரு பழமாக நாவல் கனி உள்ளது.
மே, ஜூன் மாதங்களில் கிடைக்கும் : கொஞ்சம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என சுவை கொண்டது நாவல் பழம். பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் கிடைக்கக் கூடியது. கிராமப்புறங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் இந்தப் பழங்களுக்காக காடுகள் அல்லது சாலையோர நாவல் மரங்களை நோக்கி படையெடுக்கும் சிறுவர், சிறுமிகள் ஏராளம்.
உடல் நலனுக்கு உகந்தது : நாவல் பழம் நாவுக்கு இதமான சுவை தரும் என்பதோடு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக வயிற்று வலி, நீரிழிவு, கீல்வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு பலன் தரக் கூடியது நாவல் பழங்கள் ஆகும். எண்ணற்ற உடல் நல குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும், நாவல் பழங்களில் சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. பக்க விளைவுகள் என்றால் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடியது அல்ல. குறிப்பிட்ட சில உடல் நல பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும் நாவல் பழங்களை அளவோடு சாப்பிட வேண்டும் அல்லது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
ரத்த சர்க்கரை பற்றாக்குறை அளவு : நாவல் பழங்கள் ரத்த சர்க்கரை அளவை பெரிதும் குறைக்கக் கூடியது. இந்நிலையில், நாவல் பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிடும். இதேபோல, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இது உதவியாக இருக்கும். அதுவே அளவு மிகுந்தால் குறைவான ரத்த அழுத்தப் பிரச்சனை வந்துவிடும்.