இந்தியாவில் ஒவ்வொரு பருவத்திற்கு தகுந்தாற்போல சீசன் பழங்கள் ஏராளமானவை உண்டு. கோடை காலத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் மாம்பழம், நுங்கு, வெள்ளரிக்காய், முந்திரிப் பழம், நாவல் பழம், தர்பூசணி உள்ளிட்ட காய், கனி வகைகள் நமக்கு கிடைக்கின்றன. கோடைப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள் யாவும் இனிப்பாகவும், புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும். இதில், மாம்பழத்திற்கு தான் நம்பர் 1 இடம். நீங்கள் சாப்பிட்டு முடித்த பிறகும் கூட நாவில் சுவை ஒட்டி கொண்டிருக்கும். இதேபோல, சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடித்த மற்றொரு பழமாக நாவல் கனி உள்ளது.
கொஞ்சம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை கொண்டது நாவல் பழம். பொதுவாக மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலும் கிடைக்கக் கூடியது. கிராமப்புறங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் இந்தப் பழங்களுக்காக காடுகள் அல்லது சாலையோர நாவல் மரங்களை நோக்கி படையெடுக்கும் சிறுவர், சிறுமிகள் ஏராளம். இப்போதெல்லாம் அனைத்து ஊர்களிலும் சாலையோர வியாபாரிகள், பழமுதிர்சோலைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. நாவல் பழங்களில் என்னென்ன பலன் உண்டு என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.