காலையில் எழுந்தவுடன் நாம் அருந்துகின்ற காபி அல்லது டீ மற்றும் இனிப்பு சுவை கொண்ட எந்த உணவானாலும் சரி, அதில் சர்க்கரை அல்லது வெல்லம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரண்டும் தான் பொதுமக்களால் பரவலாக பயன்படுத்தக்கூடிய இனிப்பூட்டிகள் ஆகும். வெள்ளை நிற ஜீனியை ஒப்பிடுகையில் சிவப்பு / அரக்கு நிற சர்க்கரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதற்காக நீங்கள் மிகுதியான சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது. உங்களுக்கான ஊட்டச்சத்தை நீங்கள் உணவின் மூலமாகத்தான் அதிகம் பெற வேண்டும்.
சர்க்கரையை காட்டிலும் வெல்லம் எந்த அளவுக்கு நல்லது ? : வெல்லம் என்பது சுக்ரோஸ் கலவை கொண்ட இனிப்பூட்டியாகும். வெகு விரைவில் ஜீரணமாக கூடிய சர்க்கரையை ஒப்பிடும்போது வெல்லம் செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக வெல்லம் இருக்கிறது. தசைகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கவும் வெல்லம் உதவியாக உள்ளது. வெல்லம் என்பது மெட்டபாலிஸ நடவடிக்கைகளை ஊக்குவிக்க கூடியது என்பதால் துரிதமாக வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும்.
ஆனால் சர்க்கரை வெகு விரைவில் செரிமானமாகி, நம் ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தக் கூடியது. இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடல் வலி மற்றும் உடல் சோர்வு போன்றவற்றுக்கு இதுவே காரணமாக அமைகிறது. அதிகப்படியாக சர்க்கரை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு வெகு விரைவாக டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. சர்க்கரையை உற்பத்தி செய்ய பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் மெக்னீசியம், காவியம், இரும்புச்சத்து, செலினியம் போன்றவை நிறைந்த வெல்லம் என்பது ரத்தசோகை நோய்க்கு தீர்வாக அமைகிறது.
மிக முக்கியமான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் சர்க்கரையில் உள்ளன என்றாலும் அவற்றின் அளவு சற்று குறைவு தான்.வெல்லம் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்றும் சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமையும் என்றும் பலரும் நம்புகின்றனர். இருப்பினும் இவற்றையெல்லாம் உறுதி செய்யும் முறையில் உறுதியான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.