உடல் எடையை குறைக்க பல்வேறு விதமான உத்திகளை நாம் கடைபிடித்திருப்போம். வெவ்வேறு உணவுகளை ஒன்று சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக உடல் எடை குறையும் என்ற பரிந்துரைகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கும். மூலிகைகள், வாசனை பொருட்கள், வெதுவெதுப்பான தண்ணீர் போன்ற பல்வேறு உணவு முறைகளை கையாள்வதன் மூலமாக உடல் எடை குறையும் என்றும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும் என்றும் பலர் கூற கேட்டிருப்போம்.
ஆனால், உடல் எடையை குறைக்க பச்சை மிளகாய் உதவியாக இருக்கும் என்ற செய்தியை இதுவரை கேள்விபட்டதுண்டா? அய்யகோ என அலறுகிறீர்களா? உண்மை தானே! உடல் எடையை குறைக்க வேண்டி ஜிம்மில் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேற்பட்ட நேரமோ உடற்பயிற்சி செய்யச் சொன்னால் கூட எளிமையாக செய்து விடலாம். ஆனால், பச்சை மிளகாய் சாப்பிடுவது எளிதான காரியமா என்ன? இருப்பினும், பச்சை மிளகாயில் கிடைக்கும் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஊட்டச்சத்து அளவு : ஒரு கப் அளவிலான பச்சை மிளகாயில் 11 சதவீதம் விட்டமின் ஏ, 18.2 சதவீதம் விட்டமின் சி மற்றும் 3 சதவீதம் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்தை வழங்கவும், கொழுப்பை கரைக்கவும் இது உதவிகரமாக இருக்கும். பச்சை மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துகள் கண்களின் நலனுக்கு உகந்தது. சரும பாதுகாப்பிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் பயன்படும்.
ஆய்வு சொல்வது என்ன? பச்சை மிளகாயில் உள்ள கேபஸின் என்ற பொருளானது உடல் எடையை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு 6 மி.கி. அளவுக்கு கேபஸின் சத்துப் பொருளானது நம் உடலில் தொடர்ந்து 12 வாரங்களுக்கு சேர்ந்தது என்றால், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு குறையும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. 12 வாரங்களில் 0.900 கிராம் அளவுக்கு உடல் எடை குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதே சமயம், இந்த அளவில் பச்சை மிளகாய் எடுத்துக் கொண்டவர்களுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆற்றல் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது : சீரான அளவில் கேபஸின் சத்து உடலில் சேரும் போது, ஆற்றல் வீணடிக்கப்படுவதை தடுக்கிறது. பிரவுன் அடிபோஸ் என்னும் தசையின் செயல்பாட்டை தூண்டுகிறது. இந்த பிரவுன் அடிபோஸ் என்பது உடலில் வெப்ப நிலையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கிறது.
இதயநோய் பாதிப்பு குறையும் : மிளகாய், மிளகு போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு இதயம் சமப்ந்தப்பட்ட நோய்கள் அல்லது புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று அமெரிக்க இதய நல அராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வாரத்தில் 4 நாட்கள் பச்சை மிளகாயை எடுத்துக் கொண்டவர்களின் இறப்பு விகிதம் என்பது மிளகாய் சாப்பிடாதவர்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது.