வால்நட்டிற்கும், கோடை காலத்திற்கும் பாரம்பரிய தொடர்பு எதுவும் இல்லை. ஏனென்றால் வால்நட் பெரும்பாலும் குளிர் காலத்தில் விளையக் கூடியவை. ஆனால், ஏதோ சில காரணங்களால் கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமான உணவுகளில் வால்நட் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. நம் இதய நலன் காக்க தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் வால்நட்டில் உள்ளது. இந்த சத்தை நம் உடல் உற்பத்தி செய்யாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், அழற்சியை தவிர்க்கவும் ஒமேகா சத்து மிக அவசியமாகும். இது மட்டுமல்லாமல் வால்நட்டில் மிகுதியான புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் நீரிழிவு, இதய நோய் போன்ற நீடித்த நோய்களை தவிர்க்கவும் வால்நட் உதவியாக அமையும். ஆனால் நாளொன்றுக்கு 28 கிராமுக்கு மிகுதியாக வால்நட் சாப்பிடக் கூடாது.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா கூறுகையில், “பொதுவாக கோடைகாலத்தில் உடல் உஷ்ணமாக இருக்கும். வால்நட் கூட உஷ்ணத்தை ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருள் தான். ஆனால், அதற்காக கோடைகாலத்தில் அதை சாப்பிடக் கூடாது என்று அர்த்தமல்ல. அதே சமயம், வால்நட்டுகளை இரவு முழுவது ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. வால்நட்டுகளின் உஷ்ணத்தை தணிக்க அதை சாலட், ஜூஸ், ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்’’ என்று தெரிவித்தார்.