என்னதான் சமையலில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் எல்லாம் தெரியும் என்று சொல்லிவிட முடியாது, காரணம் கிட்சன் ஹேக்ஸ் என்பது கடல் போல் கொட்டிக்கிடக்கின்றன. அதை தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள போய்க்கொண்டே இருக்கும். அந்த வகையில் இப்போது சொல்லப்போகும் இந்த கிட்சன் குறிப்புகளும் உங்களின் சமையல் திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும் என நம்புகிறோம். சரி அவை என்னென்ன பார்க்கலாம்..!
முட்டையை சரியான பதத்தில் வேக வைக்க.. : பொதுவாகவே முட்டைகளை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அறை வெப்பநிலையில் வைப்பதே போதுமானது. தேவையான அளவுக்கு மட்டும் முட்டைகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது. அந்த வகையில் அறை வெப்பநிலையில் உள்ள முட்டைகளை வேக வைக்கும் முன் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொதிக்க வையுங்கள். கொதிநிலையை அடைந்த பின்பே முட்டைகளை போட வேண்டும். இவ்வாறு செய்வதால் முட்டை ஓடு உறிக்கும்போது வெள்ளைக்கருவில் ஒட்டியில்லாமல் ஈசியாக வந்துவிடும்.
சாஃப்டான சப்பாத்தி சுட.. : சப்பாத்தி சாஃப்டாக வர வேண்டுமெனில் நன்கு பிசைய வேண்டும். அடித்து பிசைய வேண்டும். அப்படி நீண்ட நேரம் செய்தால் மட்டுமே சாஃப்டான சப்பாத்தி சுட முடியும். ஆனால் இப்படி எதுவுமே செய்யாமல் சாஃப்டான சப்பாத்தி வேண்டுமெனில் பால் சேர்த்து பிசைந்து பாருங்கள். நன்கு மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
பூரி எண்ணெய் ஒட்டாமல் சுட.. : பலருக்கும் பூரி பிடித்தாலும் எண்ணெய் ஒட்டியிருக்கும் காரணத்தால் எளிதில் செரிமானமாகாது. வயிறு மந்தமாக இருக்கும் என நினைப்பார்கள். அப்படி ஆசைப்பட்டு சாப்பிட்டாலும் 2 அல்லது 3க்கு மேல் சாப்பிட முடியாது. எண்ணெய் இருக்கும் காரணத்தால் உடனே தெகிட்டி விடும். எனவே எண்ணெய் ஒட்டாமல் பூரி சுட மாவை பிசைந்ததும் 15 நிமிடங்கள் ஃபிரீசரில் வையுங்கள். பின் சுடும் போது எண்ணெய் சேர்த்து பிசையாமல் மாவு சேர்த்து பிசையுங்கள். பின் எண்ணெய் போட்டு எடுக்க எண்ணெய் ஒட்டாமல் நன்கு உப்பி வரும்.