மழைக்காலத்தில் பெரும்பாலானோர் சோர்வாக உணர்வார்கள். வெளியில் பெய்யும் மழையும், குளிர்ந்த காலநிலையும் உங்களை மந்தமாக உணரவைக்கும், ஆனால் சில நேரங்களில் உங்கள் உடலில் இரும்புச்சத்து பற்றாக்குறை இருப்பதை இது குறிக்கிறது. இரத்த சோகை குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இரும்புச்சத்து உதவுகிறது. மேலும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இரைப்பை குடல் பணியை சீராக்க உதவுகிறது மற்றும் உடல் வெப்பநிலையை சீராக்குகிறது. எனவே இந்த மழைக்காலத்தில் இரும்புச்சத்து நிறைந்த சில உணவுகளை சாப்பிடுங்கள்.
பச்சை காய்கறிகள்: காய்கறிகள் அனைத்து விதமான காலநிலைகளின் போதும் சாப்பிடக்கூடியவை. காய்கறிகளில் நார்ச்சத்து இயற்கையாகவே மிகுந்திருக்கிறது. உடலில் இயல்பாகவே நார்ச்சத்து இருந்தாலும் ஒரு நாளைக்கு 35 கிராம் அளவு நார்ச்சத்து தேவை அதை காய்கறிகள், பழங்கள் மூலமே பெற்றுவிடலாம். மேலும் தினமும் ஒரு கீரையை உங்கள் உணவு பட்டியலில் சேர்த்து கொள்வது நல்லது. முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலை கீரை, ப்ரோக்லி ஆகியவற்றில் ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்: பாதம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கிய வாழ்விற்கு உதவுகிறது. பாதம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. மேலும் உலர் திராட்சை, பேரீட்சை பழம் போன்றவற்றையும் தினமும் சாப்பிடலாம். இது ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.
பருப்பு வகைகள்: பருப்பு வகைகளில் இரும்பு சத்து மட்டுமன்றி பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு, கொள்ளு, பசியப்பயறு, சுண்டக்கடலை என அனைத்து விதமான பயறு வகைகளிலும் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இவற்றை முளைகட்டியும் சாப்பிடலாம். இது உங்கள் உடலுக்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. மேலும் வாரம் இரண்டு நாட்கள் சோயாபீன்ஸ் சாப்பிடலாம்.
விதைகள்: பூசணி விதைகள், ஆளிவிதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே சேமித்து வைத்து கொள்ளுங்கள். கோடை காலத்திலேயே இவற்றை வெயிலில் சற்று உலர்த்தி உலர்ந்த ஜாடியில் காற்று புகாமல் வைத்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு தேவைப்படும் போது அவற்றை சிற்றுண்டி செய்யலாம் அல்லது பல்வேறு வகையான உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
கடல்வாழ் உயிரினங்கள்: கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், நண்டு, இறால் போன்றவற்றில் எண்ணற்ற ஆரோக்கிய சத்துக்கள் உள்ளது. ஒமேகா 3 உட்பட உடல்நலத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடலாம். மேலும் அனைத்து மீன்களும் இரும்பின் நல்ல மூலமாகும், எனவே உங்கள் பகுதியில் கிடைக்கும் மீன்களை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
சாக்லேட்: டார்க் சாக்லேட் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் 55% கோகோ இருப்பதால் உங்களுக்கு தேவையான இரும்பு சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது. மேலும் சாக்லேட் நல்ல ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. எனவே, நீங்கள்மழைக்காலத்தை ஆரோக்கியமான முறையில் அனுபவிக்க சாக்லேட் சாப்பிட்டு மகிழுங்கள். தினமும் ஒரு துண்டு அளவு சாக்லேட் சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது.