உங்கள் ஆரோக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சூப்பர் ஃபுட் ஓட்ஸ். அதனால் தான் உடை எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் ஓட்ஸ்-யை உணவாக எடுத்துக்கொள்கின்றனர். சமைக்க நேரமின்மை காரணமாக நம்மில் பலர் காலையிலும், இரவிலும் ஓட்ஸ் -யை உணவாக உட்கொள்வோம். டயட்டில் இருக்கும் அனைவரின் பட்டியலிலும் ஓட்ஸ் கண்டிப்பாக இருக்கும். ஆனால், உண்மையில் யாரெல்லாம் உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கான உணவுதான் ஓட்ஸ் என அறிவியல் ரீதியிலான ஆய்வுகள் கூறுகிறது.
அதே போல, ஓட்ஸ் -யை உணவாக யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்ற தவறான எண்ணம் நிலவுகிறது. ஓட்ஸ் உணவில் கரையக்கூடிய நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது. இதனால், உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம். அதில், உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை எளிமையாக்குகிறது. இது மட்டுமல்லாமல் ஓட்ஸ் உணவில் புரதம், விட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் இதர சத்துக்கள் நிரம்பியுள்ளன.
ஓட்ஸ் சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். அதாவது, கொஞ்சம் சாப்பிட்டாலே, நிறைய சாப்பிட்ட உணர்வு இருக்கும். இது பசியை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் தினசரி சிறிதளவு ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். இது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த வகையில் உதவுகிறது, எவ்வளவு ஓட்ஸ் சாப்பிடணும் என்பதை இங்கே பார்க்கலாம்.
உடல் எடை எப்படி அதிகரிக்கிறது? : ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்கவும், அதே சமயம் அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். ஆனால், நீங்கள் எப்படி தயார் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அதன் பலன் வேறுபடும். ஓட்ஸ் உணவுடன் சேர்த்து பழங்கள், தண்ணீர் போன்ற குறைவான கலோரி கொண்டவற்றை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும். ஆனால், சாக்கலேட், சிப்ஸ், வெண்ணெய் போன்ற கலோரி மிகுந்த உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். ஓட்ஸ் உடன் சேர்த்து கிழங்கு வகைகள், அசைவ உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் கலோரி அதிகரிப்பதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.
எவ்வளவு ஓட்ஸ் சாப்பிடலாம்? : நாளொன்றுக்கு எவ்வளவு ஓட்ஸ் சாப்பிடலாம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சராசரி நபர் ஒருவர், நாளொன்றுக்கு 3 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் சாப்பிடலாம். அதுவே நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறீர்கள் என்றால் இதற்கு மேற்பட்ட அளவில் ஓட்ஸ் சாப்பிடலாம். ஆனால், ஓட்ஸ் உணவைக் காலையில் சாப்பிட வேண்டும் அல்லது இரவு கடைசி உணவாகச் சாப்பிட வேண்டும்.