கடலை மாவு, 'வெயிட் லாஸ்' செய்ய விரும்புவோருக்கு ஒரு அற்புதமான உணவாகும். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என பரவலாகப் பயன்படுத்தப்படும் இதில் புரோட்டின், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், தயாமின், காப்பர், ஸின்க் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதையெல்லாம் எப்படி உங்கள் எடை இழப்பு செயல்முறைக்கு பயன்படுத்தலாம், அதாவது கடலை மாவினை கொண்டு நீங்கள் செய்யக்கூடிய 5 'வெயிட் லாஸ்' ரெசிபிக்கள் இதோ..
பெசன் சில்லா (Besan Chilla) : ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அதில் தண்ணீர் சேர்த்து கிளறவும். பின் உப்பு, மிளகு, அஜ்வைன், சிவப்பு மிளகாய், விருப்பமான காய்கறிகள் மற்றும் விருப்பமான மசாலாப் பொருட்களை சேர்க்கவும். அனைத்தையும் சேர்த்த 5 நிமிடங்களுக்கு பிறகு மிதமான தீயில் ஒரு கடாயை சூடாக்கி, அதில் சிறிது வெண்ணெய் அல்லது நெய் அல்லது எண்ணெய் தடவி மாவை ஊற்றி, நீங்கள் விரும்பும் அளவுக்கு பரப்பி விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் புரட்டவும். இருபுறமும் 5 நிமிடங்கள் சமைக்கவும். பிறகு சூடாக சாப்பிடுங்கள்.
தோக்லா (Dhokla) : ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, சர்க்கரை, சிட்ரிக் அமிலம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையில் தண்ணீரை சேர்த்து, நடுத்தர நிலைத்தன்மைக்கு கொண்டு வாருங்கள். ஒரு சிறிய கிளாஸில் பேக்கிங் பவுடரை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி பேசன் மாவுடன் கலக்கி, அந்த மாவை சூடான பாத்திரத்தில் ஊற்றவும். மாவை 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து பின் இறக்கவும். ஆறியதும் துண்டுகளாக நறுக்கி சாப்பிடவும்.
பெசன் டோஸ்ட் (Besan toast) : கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தண்ணீரைக் கலந்து, லேசான நிலைத்தன்மை கொண்ட மாவை உருவாக்கவும். மாவில் கட்டிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிரவுன் ரொட்டியை இரண்டு துண்டுகளாக வெட்டி, மாவுக்குள் முக்கி எடுக்கவும். அதை உடனே ஒரு சூடான கடாயில் போட்டு வெண்ணெய் அல்லது எண்ணெய்யுடன் சேர்த்து வறுக்கவும். அவ்வளவு தான்.
கேட்டே கி சப்ஜி (Gatte ki sabji) : ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அதனுடன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், ஜீரா, அஜ்வைன், தனியா தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். இந்த கலவையில் தயிர் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். எல்லாவற்றையும் சரியாகக் கலந்து, மெல்ல மெல்ல தண்ணீர் சேர்த்து மாவாக பிசையவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், பிசைந்த மாவை மெல்லிய குச்சிகளாக உருட்டி, கொதிக்கும் நீரின் உள்ளே போடவும், அது வெந்ததும் அவற்றை வெளியே கொண்டு வந்து கட்டம் கட்டமாக வெட்டவும். வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு விழுது மற்றும் மசாலாப் பொருட்களுடன் ஒரு கிரேவியை தயார் செய்யவும். குழம்பு தயாரானதும், கேட்டே எனப்படும் சமைத்த கடலை மாவை அந்த கிரேவியில் சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும், பின் சாப்பிடவும்.
காந்த்வி (Khandvi) : 1:3 என்ற விகிதத்தில் கடலை மாவு பீசன் மற்றும் மோர் எடுத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களின் சுவை உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த மாவில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுதைச் சேர்க்கவும். மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, மாவு கெட்டியாகும் வரை சமைக்கவும். மாவை தொடர்ந்து கிளறவும். மாவு கெட்டியானதும், ஒரு தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவவும். தட்டில் மாவை பரப்பவும். பிறகு மாவை கொண்டு சிறிய மெல்லிய ரோல்களை உருவாக்கலாம். அதை ஆறவைத்து கொத்தமல்லி அல்லது தேங்காய் துருவல் கொண்டு அலங்கரித்து பின் சாப்பிடவும்.