உப்பு அதிகமானால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் : அதிகப்படியான உப்பு சேர்ப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடலில் உப்பு அதிகம் சேரும்போது கால்சியம் வெளியேறுகிறது. இதனால் எலும்பின் பலம் பாதிக்கப்படும். அதேபோல உப்பு அதிகமானால் உடலில் தேவையற்ற நீர் தேங்கும். இதனால் உடல் உப்பியதைப் போல காட்சியளிக்கும். கட்டுப்பாடு இல்லாமல் உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு நாளில் எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ளலாம்.! ஒரு நபருக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு எவ்வளவு உப்பு தேவை என்ற வரையறை இருக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 கிராம் அளவுக்கான உப்பு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் உலகில் உள்ள பல மக்கள் அன்றாட தேவையை காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலாக உப்பு சேர்த்து கொள்கின்றனர். நேரடி சமையல் மூலமாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மூலமாகவோ நாம் சேர்த்துக் கொள்ளும் உப்பு அளவு அதிகரிக்கிறது.
சிப்ஸ் வகைகளில் அதிக உப்பு .! நம் வீட்டில் சமைக்கப்படும் அதே உணவுகளை ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடும் போது அதில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடக் கூடிய உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகளில் நம் தினசரி தேவையில் பாதி அளவுக்கான உப்பு இருக்கிறது. 150 கிராம் பாக்கெட்டில் 2.5 கிராம் உப்பு மற்றும் அதிகப்படியான சோடியம் ஆகியவை இருக்கின்றன.
உப்பின் அளவை குறைப்பது எப்படி.? நாம் வழக்கமாக சேர்த்துக் கொள்கிற உப்பின் அளவை திடீரென்று குறைத்தால் ஒட்டுமொத்த உணவும் சுவையின்றி இருப்பதை போன்ற உணர்வு ஏற்படும். ஆகவே உப்பை குறைக்க மெல்ல, மெல்ல பழக வேண்டும். சிறிது, சிறிதாக குறைத்துக் கொண்டு வர வேண்டும். உப்பின் அளவை குறைப்பதால் உணவின் சுவை சுமாராக இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றும் பட்சத்தில் எலுமிச்சை சாறு லேசாக பிழிந்து விட்டு சாப்பிடலாம்.