புரதம் நிறைந்த மதிய உணவை உண்பது உங்கள் எடையை குறைக்க பெரிதும் உதவும். அதிக புரத உணவுகள் உங்கள் பசியை திருப்திப்படுத்துவதோடு, உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். அதாவது, மதிய உணவுக்குப் பிறகு நீங்கள் அதிகமாக சாப்பிட மாட்டீர்கள் அல்லது புசிப்பது போன்ற உணர்வு தோன்றாது. புரத சத்து நிறைந்த உணவும் உடற்பயிற்சியும் இணைந்தால், எளிதில் எடையை குறைத்து தசையை பெறுவீர்கள். எனவே அதிக புரதச்சத்து கொண்ட மிகவும் சுவையான சைவ மற்றும் அசைவ உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
பன்னீர் புர்ஜி : மிக விரைவாகவும் சத்தாகவும் சாப்பிட வேண்டும் என்றால் பன்னீர் புர்ஜி சிறந்த தேர்வு. இதை செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். அடுத்து அதில் சீரகம் சேர்க்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும். அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். தக்காளி மென்மையாகும் வரை நன்றாக வதக்கவும். பிறகு இதில் கரம் மசாலா மற்றும் சிவப்பு மிளகாய் தூளையும் சேர்க்கவும். அடுத்து அரைத்த பன்னீர் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். பன்னீரில் கால்சியம் மற்றும் புரதம் அதிக அளவில் உள்ளது. எனவே இது ஒரு சிறந்த மதிய உணவாகும்.
சிக்கன் சாலட் ரோல் : சிக்கன் ரோல்கள் ஆரோக்கியமானது தான். என்றாலும் அதில் சேர்க்கப்படும் சீஸ், சாஸ்கள் மற்றும் மைதாவில் இருந்து தயாரிக்கும் பிளாட் பிரெட் ஆகியவை உங்கள் எடையை அதிகரிக்கின்றன. இவற்றை தவிர்த்து அந்த மைதா ரோலுக்கு பதிலாக, சில பொருட்களை மாற்றுவதன் மூலம் ஆரோக்கியமான மதிய உணவை உருவாக்கலாம். மாவு அடிப்படையிலான ரொட்டிக்குப் பதிலாக, ஃபில்லிங்ஸை மடிக்க மொறு மொறுப்பான கீரையைப் பயன்படுத்தவும். சீஸ் மற்றும் மயோவிற்கு பதிலாக, தயிர் அடிப்படையிலான சாஸ் செய்து, அதை மெல்லியதாக வெட்டப்பட்ட கோழி துண்டுகள், தக்காளி, வெங்காயம், மிளகாய் மற்றும் பெல்-பெப்பர்ஸுடன் சேர்த்து சுவைத்து சாப்பிடலாம்.
வெஜ் மசாலா ஓட்ஸ் கிச்சடி : இந்த மதிய உணவை தயாரிக்க, குக்கரில் எண்ணெயை சூடாக்கி சீரகத்தை சேர்க்கவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இதில் அரைத்த பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சில நொடிகள் வதக்கவும். இப்போது ஓட்ஸ், ஊறவைத்த பருப்பு, கேரட், பிரஞ்சு பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து மிதமான சூட்டில் சமைக்கவும். பிறகு இதில் 2 கப் வெந்நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 3 விசில் வரும் வரை விடுவும். இதில் 127 கலோரிகள் மட்டுமே உள்ளதால், இந்த ரெசிபி எடை குறைப்புக்கு சரியான மதிய உணவாக அமையும்.
பீன்ஸ் சாலட் : மதிய உணவிற்கு சாலட்கள் ஒரு சிறந்த உணவாகும். இந்த ரெசிபி மிகவும் சுவையானது, செய்ய எளிதானது மற்றும் வண்ணங்கள் நிறைந்தது. பீன்ஸில் அதிக புரதம் உள்ளது மற்றும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது, இது இரத்த கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த ரெசிபியை தயாரிக்க முதலில் ஊறவைத்த பீன்ஸை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பிறகு இவற்றை பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் குடமிளகாயுடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையுடன் ஆலிவ் எண்ணெய், வெள்ளை ஒயின் வினிகர், மயோனைஸ், கடுகு, கருப்பு மிளகு தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இப்படி செய்தால், உங்கள் ஆரோக்கியமான மதிய உணவு தயாராகி விடும்.