நம் செரிமானக் கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நார்ச்சத்து மிக்க உணவுகள் அவசியமாகும். இது மட்டுமல்லாமல் இதய நலனை மேம்படுத்தவும், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் நார்ச்சத்து உணவுகள் உதவிகரமாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் நாளொன்றுக்கு 30 கிராமுக்கு குறையாமல் நார்ச்சத்து தேவை என்றும் பரிந்துரை செய்கின்றனர்.
சப்ஜா விதைகள் : ஸ்மூத்தி, தயிர் பச்சடி, ஜூஸ் போன்ற பல வகை உணவுகள் மற்றும் பானங்களில் சப்ஜா விதைகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்து உணவு இருக்கிறது. மேலும் பெக்டின் மற்றும் தாவர வகை சார்ந்த ஒமேகா - 3 ஃபேட்டி ஆசிட் போன்றவை இதில் உள்ளன. ஒரு டீஸ்பூன் அளவு சப்ஜா விதைகளில் 3.5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து கிடைக்கும்.
ஆப்பிள் : சாலட், ஜூஸ் என எந்த வகையை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆப்பிள் சேர்க்காமல் இருக்க மாட்டார்கள். ஆப்பிள் பிடிக்காது என கூறுவோரும் இருக்க முடியாது. ஒரு நடுத்தரமான அளவில் உள்ள ஆப்பிளில் 5.5 கிராம் கொண்ட நார்ச்சத்து உள்ளது. அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் தினசரி காலை வேளையில் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
பார்லி : உயர் தரமான நார்ச்சத்து பார்லியில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கும். உடல் எடையை குறைக்க உதவுவதோடு, செரிமானத்தை மேம்படுத்துகிறது. சூப், சாலட் போன்றவற்றில் பார்லியை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு சிறிய கப் அல்லது 20 கிராம் அளவு கொண்ட பார்லியில் 3.4 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்.