கோடை வெயிலின் தாக்கத்தால் உடல் எதிர்கொள்ளும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், நம்மை குளுமையாக வைத்திருக்கவும் எண்ணற்ற வழிமுறைகளை நாம் கையாளக் கூடும். அந்த வகையில் நம்மில் பலர் செயற்கை குளிர் பானங்கள் அல்லது பதப்படுத்தப்பட்ட ஜூஸ் வகைகளை வாங்கி அருந்துவதை பழக்கமாகக் கொண்டிருப்போம். ஆனால், செறிவூட்டப்பட்ட சர்க்கரையைக் கொண்ட இந்த வகை பானங்கள் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
இதற்குப் பதிலாக இயற்கையான ஜூஸ் மற்றும் ஸ்மூத்தி வகைகளை நாம் முயற்சி செய்யலாம். குறிப்பாக, கோடை காலத்தில் அதிகமாக விளையும் பழங்கள் மற்றும் காய்களை நாம் பயன்படுத்தலாம். கோடை காலத்தில் இயற்கையான உணவுகளை நாடுபவர்களின் தேர்வுகளில் பெரும்பாலும் இளநீர், எலுமிச்சை, வெள்ளரிக்காய் ஆகியவை அதிகமாக இடம்பெறக் கூடும். இவை எல்லாமே சிறந்தவை தான் என்றாலும் கூட, உங்களுக்கு சுவையும், ஆரோக்கியமும் இணைந்த சில ஜூஸ் வகைகள் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம். மேலும் பழக் கூழ் மற்றும் பால் அல்லது புளிக்காத தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்மூத்தி வகைகள் குறித்தும் பார்க்கலாம்.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை : ஒரு கிளாஸ் எலுமிச்சை நன்னாரி சர்பத் அல்லது சாத்துக்குடி ஜூஸ் அல்லது ஆரஞ்ச் ஜூஸ் இல்லாமல் ஒரு கோடை காலத்தை நிச்சயமாக கடந்து செல்ல முடியாது. விட்டமின் சி சத்து நிறைந்த இந்த சிட்ரஸ் பழங்களில் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். கோடை வெப்பத்தை தணிக்க இந்த ஜூஸ் வகைகள் உதவும். குறிப்பாக, வெயில் தாக்கத்திற்கு மத்தியில் சரும பாதுகாப்பிற்கு ஆரஞ்சு ஜூஸ் உதவிகரமாக இருக்கும்.
மாம்பழ ஸ்மூத்தி : கோடைப் பருவத்தில் கிடைக்கும் பழம் இது. முக்கனிகளில் ஒன்றாக தமிழர்கள் கொண்டாடும் இந்தப் பழம் கிடைக்காத கோடை காலத்தை நாம் பார்க்க முடியாது. இனிப்புச் சுவை மிகுந்த மாம்பழத்தை தேர்வு செய்யுங்கள். அதன் பழக் கூழை எடுத்து, அதனுடன் பால் அல்லது புளிக்காத தயிர் சேர்த்து ஸ்மூத்தி தயார் செய்து சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி : நிறைந்த நார்ச்சத்து கொண்ட இந்த பழங்கள், உடல் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும். ஒரு பவுல் நிறைய ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி எடுத்துக் கொண்டால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால், நீங்கள் பிற உணவுகளை கூடுதலாக சாப்பிட வேண்டிய ஆவல் ஏற்படாது. ப்ளூபெர்ரி பழங்கள் சேர்த்தும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.