பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் சமையலுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைக்கு பாமாயில் உள்பட பல எண்ணெய்கள் சந்தைகளில் பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு பல எண்ணெய் விற்பனை செய்து வந்தாலும், விலை மலிவான எண்ணெய் எதுவோ?அதைத் தான் மக்களும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனால் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல உடல்நலப்பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது.
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான எண்ணெய்கள்: நெய் : இந்திய சமையல் மற்றும் உணவுகளில் நெய் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் இதற்கென்று தனி இடம் உள்ளது. சுவையை மட்டும் கொடுப்பதோடு இதில் உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ,ஈ,கே மற்றும் ப்யூட்ரிக் அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால், செரிமானத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் உதவியாக உள்ளது.
கடுகு எண்ணெய் : சமையலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது கடுகு எண்ணெய். இதில் ஒற்றை நிறைவுறா கொழுப்பு (MUFA), ஆல்பா லினோலெனிக் அமிலம், வைட்டமின் ஈ உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இவற்றை நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் போது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மற்றும் இதய நோய் மற்றும் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
ஆரோக்கியமற்ற சமையல் எண்ணெய்கள்: சூரியகாந்தி எண்ணெய் : சூரிய காந்தி எண்ணெய்யில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளது. இவை உடலுக்குத் தேவை என்றாலும் ஒமேகா 3 உடன் சமநிலைப்படுத்தாமல் அதிக ஒமேகா 6-யை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிப்பதோடு, உடலில் அதிக அளவு ஆல்டிஹைட் போன்ற நச்சுப்பொருள்களையும் உற்பத்தி செய்கிறது.
என்ன தான் நிபுணர்கள் ஆரோக்கியமான சமையல் எண்ணெய் மற்றும் ஆரோக்கியமற்ற சமையல் எண்ணெய் என வகைப்படுத்தப்படுத்தினாலும் பெரும்பாலான மக்கள் பாமாயில்,சூரிய காந்தி எண்ணெய்யைத் தான் தங்களது உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஆரோக்கியமற்ற எண்ணெய் என்ற பட்டியலில் உள்ளதால் அளவுக்கு அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.