நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வால்நட்ஸில் உள்ள MUFA மற்றும் ஒமேகா 3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது. வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகளை குறித்து காண்போம்.
குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது : இந்த அக்ரூட் பருப்புகள் அதாவது வால்நட் நல்ல செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கின்றன. அவற்றில் இருக்கும் ப்ரீபயாடிக் பண்புகள், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இதயத்திற்கு நல்லது : வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் இதய ஆரோகியத்திற்கு வழிவகுக்கிறது. இந்த பருப்புகளில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு காமா-டோகோபெரோல் வடிவத்தில் உள்ளது. இது இதய பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது. மேலும் ஒமேகா -3, கொழுப்பின் அளவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
உடல் பருமனை குறைக்க உதவுகிறது : இந்த பருப்புகள் பசியை குறைப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகின்றன. இவற்றை ஒரு சிற்றுண்டியாக சாப்பிடலாம். இந்த வால்நட்ஸ்களை வறுத்து சிறு சிறு துண்டுகளாக பொடித்து வாழைப்பழம், மாம்பழம் ஆகியவற்றை கொண்ட சாலட்களில் சேர்ந்து சாப்பிடலாம். அவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம், ஏனெனில் அவற்றின் சத்து மதிப்பு அப்படியே தான் இருக்கும்.