மாதுளம் பழம் மிகவும் ஆரோக்கியமான பழங்களில் ஒன்று. சாட்கள் மற்றும் சாலட்களுடன் இதை கலந்து சாப்பிடும்போது மிக சுவையாக இருக்கும். இதை பலரும் ஜூஸாக தயாரித்தும் சாப்பிடுவார்கள். அதே போன்று, டயட்டில் உள்ளவர்களும் மாதுளை பழத்தை எடை குறைப்புக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது எவ்வாறு எடையைக் குறைக்க உதவுகிறது என்பதை பலரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவில் மாதுளை பழம் எப்படி உடல் எடையை குறைக்க வழி செய்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது : மாதுளம் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் லினோலெனிக் அமிலம் போன்ற பல்வேறு கலவைகள் நிறைந்துள்ளன. எனவே, இவை வளர்சிதை மாற்றத்தை விரைவுப்படுத்தும் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும். இதனால் தான் பலரும் டயட்டில் இருக்கும்போது மாதுளையை சாப்பிட்டு வருகின்றனர்.
குறைந்த கலோரி : யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர்-படி (யுஎஸ்டிஏ) , 100 கிராம் மாதுளை விதைகளில் 83 கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும் இதில் பெரும்பாலானவை கார்போஹைட்ரேட்டிலிருந்து வருகிறது. எனவே ஜூஸிலிருந்து நீங்கள் பெறும் குறைந்த அளவு கலோரிகள் கூட உடலுக்கு நல்லது என்று இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
சர்க்கரை பானங்களுக்கு சிறந்த மாற்று : மாதுளை இயற்கையாகவே இனிப்பானது என்பதால், மாதுளை சாறு, பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ்கள், கோலாக்கள் மற்றும் சோடாக்கள் போன்ற அதிக சர்க்கரை கொண்ட பானங்களுக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது. 100 கிராம் மாதுளையில் சுமார் 14 கிராம் சர்க்கரை உள்ளது, இது சற்று அதிகமாக உள்ளது, ஆனால் உணவு நார்களால் நன்கு சமநிலைப்படுத்தப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிக நார்ச்சத்து : ஒரு நடுத்தர அளவிலான மாதுளையில் சுமார் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது, இது நீங்கள் சாப்பிடும் உணவுகளை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் உங்களின் கலோரிகளை குறைக்கவும் வழி செய்கிறது. பொதுவாக எடையை குறைக்க முயற்சிக்கும் போது, நமக்கு நார்ச்சத்தும் தேவைப்படும். எனவே, உங்களுக்கான நார்சத்துக்களையும் இது வழங்குகிறது.
எடை குறைப்புக்கு மாதுளையை எப்படி பயன்படுத்துவது? மாதுளை ஜூஸ் செய்முறை : இந்த செய்முறையில் பீட்ரூட் மற்றும் கற்றாழை சாறு, சிறிது மிளகு தூள் ஆகியவற்றையும் மாதுளம் பழத்தில் கலந்து சாறு போன்று தயாரிக்கலாம். நீங்கள் மாதுளை பழங்களை சாறாக்கி, ஸ்மூத்திஸ், காக்டெய்ல் மற்றும் யோகர்ட் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தலாம். அல்லது உங்கள் பானங்களில் சுவையான ஐஸ் கட்டிகளாகப் பயன்படுத்த ஐஸ் ட்ரேயில் உறைய வைத்து பயன்படுத்தலாம்.