குளிர்காலத்தில் சிறிது மசாலாக்கள் சேர்த்து ஒரு கிண்ணம் நிறைய சூடான அவித்த வேர்க்கடலை சாப்பிடும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. வேர்க்கடலைகள் மிகச் சாதாரணமான நொறுக்கு தீனியை போல காணப்பட்டாலும் உண்மையிலேயே அதில் உள்ள நன்மைகள் அதிகம். வேர்க்கடலைகளில் அதிகப்படியான புரதம், கார்போஹைட்ரேடுகள் மற்றும் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புச்சத்து நார்ச்சத்து ஆகியவை காணப்படுகின்றன. இவை நம் உடலுக்கு சக்தி அளிப்பது மட்டுமல்லாமல் உடலில் தேவையற்ற நோய்கள் உண்டாவதையும் தடுக்கிறது. குளிர்காலம் துவங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மீதம் உள்ள நிலையில் வேர்க்கடலை பற்றியும் அது உண்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் பார்ப்போம்.,
இதயத்திற்கு நன்மை அளிக்கிறது: வேர்க்கடலைகள் இயற்கையாகவே இதயத்திற்கு நன்மை கொடுக்கக்கூடிய நல்ல கொழுப்புகளை அதிகப்படுத்தி கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் பல ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலைகள் உண்பதன் மூலம் அதிகப்படியான ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகளையும் நார்ச்சத்து மற்றும் புரதங்கள் ஆகியவை வேர்க்கடலைகளில் அதிக அளவில் நிறைந்துள்ளன. வேர்க்கடலைகளில் நிறைந்துள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் மற்றும் அமினோ அமிலம் ஆகியவை உடலுக்கு மற்றும் ரத்த நாளங்களுக்கு நன்மை கொடுக்கக் கூடியது. இதன் மூலம் தமனிகளிலும் ரத்தநாளங்களிலும் குறைபாடுகள் ஏற்படாமலும் தேவையற்ற கொழுப்புகள் சேராமலும் வேர்க்கடலை பாதுகாக்கிறது.
சர்க்கரை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது: வேர்க்கடலைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தும் தேவையற்ற கொழுப்புகள் இல்லாமலும் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல் வேர்க்கடலைகளில் இன்சுலின் சுழற்சியை ஊக்குவிக்கும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலின் செல்களுக்குள் செலுத்தி அதனை சக்தியாக மாற்ற உதவுகிறது.
உடலில் உள்ள செல்களுக்கு நன்மை அளிக்கிறது: ஏற்கனவே கூறியதைப் போல வேர்க்கடலைகளில் நன்மை அளிக்கக்கூடிய கொழுப்புகள் அதிகமாக உள்ளது. அதில் ஆலிவ் ஆயிலில் காணப்படக்கூடிய ஓலிக் எனப்படும் ஒருவித அமிலமும் காணப்படுகிறது. இது உடலில் உள்ள செல்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து அவற்றை பாதுகாப்பாகவும், வலிமையுடனும் மாற்ற உதவுகிறது.
அதிகமாக வேர்க்கடலை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்: என்னதான் வேர்க்கடலைகள் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு உணவாக இருந்தாலும் அதை அதிக அளவில் உட்கொள்ளும் போது அவை கண்டிப்பாக சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வேர்கடலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் புரதங்களையும் மட்டுமே அதிக அளவில் கிரகித்துக் கொள்ள பழக்கப்பட்ட உடலினால் மற்ற முக்கிய சத்துக்களான இரும்பு சத்து, மாங்கனிசு மற்றும் கால்சியம் ஆகியவற்றை கிரகித்துக் கொள்ள இயலாத நிலை ஏற்படலாம். இது உங்கள் உடல் எடையை அதிகரிப்பதோடு பலவித செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடும். முக்கியமாக சிலருக்கு இயற்கையாகவே வேர்க்கடலை உண்பதால் ஒவ்வாமை ஏற்படும். உதாரணத்திற்கு மூக்கில் நீர் வடிதல், தொண்டை கரகரப்பு, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மூச்சுப் விடுவதில் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுவதை கண்டறிந்தால் நீங்கள் வேர்க்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு வேர்கடலைகள் உண்ணலாம்? ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 42 கிராம் வேர்க்கடலைகள் உண்பது சரியான அளவில் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 16 வேர்க்கடலைகள் என்ற விகிதத்தில் உள்ளது. சிலர் ஒரு கை நிறைய வேர்க்கடலைகளை கொண்டால் போதுமானது என்றும் முக்கியமாக பசி அதிகமாக உள்ள வேலைகளில் இப்படி உண்ணும் போது உங்கள் உடல் எடை கட்டுப்பாட்டிற்கு மிகவும் உதவுவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் என தெரிவித்துள்ளனர்.