"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்கிற பழமொழியை நாம் வழக்கமாக கேட்டிருப்போம். இந்த வரிகள் நமது உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சீரான உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே நாம் நினைத்தபடி நம்மால் வாழ முடியும். இன்றைய நவீன உலகில் பல்வேறு வாழ்வியல் மாற்றங்களை நாம் மேற்கொண்டு வருகிறோம். இவை முற்றிலும் நம் ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. இயற்கை வழியை பின்பற்றி வந்தபோது நமது உடல் நாம் சொல்வதை அப்படியே கேட்டு வந்தது.
ஆனால் தற்போதைய சூழலில் மாத்திரைகளை உட்கொண்டு நாம் சொல்வதை நமது உடல் கேட்கும் அளவிற்கு பல உடல்நல மாற்றங்கள் நமக்குள் ஏற்பட்டுள்ளது. நமது உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப சில ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றி வந்தாலே போதும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் தினமும் கொஞ்சம் பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.
உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் :பண்டைய காலங்களில் இந்திய மருத்துவத்தில் பாதாமை மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகித்து வந்தனர். இன்றும் சில முக்கிய மருத்துவ பயன்பாட்டிற்கு பாதாமை பயன்படுத்துகின்றனர். எனவே தினமும் தொடர்ந்து பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் உடலை எப்போதும் புத்துணர்வுடன் வைக்கும்.
உடல் எடை : உடல் எடை குறைவாக இருப்போர் தினமும் பாதாம் சாப்பிடுவதால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடைக் கூடும். மேலும் தசை நிறைவும் அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வலு கிடைக்கும். உடல் எடையை உடனே அதிகரிக்காமல் சீரான இடைவேளையில் தசையின் நிறை மற்றும் உடல் எடையை அதிகரிக்க பாதாம் உதவும்.
முடியின் ஆரோக்கியம் : வாழ்வியல் மாற்றங்களால் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் பலருக்கு உண்டாகி வருகிறது. பல்வேறு வழிமுறைகளை செய்தாலும் முடி உதிர்வு பிரச்சனை தீர்ந்த பாடில்லை. உங்களின் உணவில் பாதாமை சேர்த்து கொண்டால் முடி உதிர்வு பிரச்சனை குறையும். மேலும் இளம் வயதில் வரும் நரை முடிகளை தடுக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, உங்களின் உடல்நலத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்க சிறிதளவு பாதாம் சாப்பிட்டு வருவது சிறந்தது.