பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை இதில் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து மிகுந்த பச்சை பட்டாணியை குளிர் காலத்தில் சாப்பிடுவதன் மூலமாக இன்னும் சிறப்பான பலன்களை பெற முடியும்.
ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் : பச்சை பட்டாணியின் கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு மிக, மிக குறைவாகும். நாம் சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு வேகமாக சேருகிறது என்பதை குறிப்பதுதான் கிளைசமிக் இன்டெக்ஸ் ஆகும். இது மட்டுமல்லாமல் பச்சை பட்டாணியில் புரதம் மற்றும் நார்ச்சத்து போன்றவை மிகுதியாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வரும்.
புரதச்சத்து மிகுந்தது : நம் உடல் ஆற்றலுக்கு புரதச்சத்து மிக, மிக அவசியமாகும். இது மட்டுமல்லாமல் நார்ச்சத்தும் முக்கியமானது. இந்த இரண்டு சத்துக்களையும் மிகுதியாகக் கொண்டுள்ள பட்டாணி சாப்பிடுவதால் நம் உடல் வலுவடையும். குறிப்பாக, புரதம் நிறைந்த இறைச்சி உணவுகளை தவிர்க்கும் சைவ பிரியர்களுக்கு புரத தேவையை பட்டாணி நிறைவு செய்கிறது. வளர் இளம் குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகுதியாக தேவைப்படும் நிலையில், அவர்களுக்கு தினந்தோறும் ஒரு கை அளவு பட்டாணி அவித்து சாப்பிடக் கொடுக்கலாம்.