எப்போதுமே நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். ஏனெனில் அவைகள் ஊட்டச்சத்துக்களால் நிரம்பி உள்ளன என்று அட்வைஸ் செய்யாத ஆளே இல்லை எனலாம். பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது.ஒவ்வொரு பருவத்திலும் பலவிதமான தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் நம் கைகளுக்கு வந்து சேர்ந்தாலும் கூட அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஊட்டச்சத்து மதிப்பு காலப்போக்கில் குறையும் என்பது பற்றி நீங்கள் அறிவீர்களா? ஆம்! காலப்போக்கில், பல்வேறு காரணங்களால் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் குறைந்து, நமக்குள் பல்வேறு குறைபாடுகள் உருவாக வழிவகுக்கின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு குறைவது எப்படி? நேஷனல் ஜியோகிராஃபிக் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, வல்லுநர்கள் இந்த பிரச்சினையின் மூலத்தை மண்ணின் தரத்தில் கண்டறிந்துள்ளனர். கடந்த சில தசாப்தங்களில், அதிகப்படியான இரசாயன பயன்பாடு, உரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் பல காரணங்களால் மண்ணின் தரம் "சமரசம்" செய்யப்பட்டுள்ளது. அறுவடை முறைகள், இயற்கையான முறைகளிலிருந்து இயந்திரங்களுக்கு மாறி, மண்ணின் ஆரோக்கியத்தை தோண்டி எடுக்கின்றன.
இது தவிர, புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, வளிமண்டல வெப்பநிலை அதிகரித்து, மண்ணின் ஈரப்பதம் இன்னும் அதிகமாக இழக்கப்படுகிறது. இது பயிர்களையும் பாதித்து, அவைகள் ஊட்டச்சத்தை இழக்கும் அபாயத்தையும் உருவாக்கிறது. மண்ணில் மட்டுமல்ல, காற்றில் அதிகரிக்கும் கரியமில வாயுவால் பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர பயிர்களின் ஊட்டச்சத்துக்கள் குறைந்து வருவதாகவும் வெளியான அறிக்கை கூறுகிறது.
இதனால், உட்கொள்பவர்களுக்கு என்னென்ன தீங்குகள் ஏற்படும்? சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஆன டேவிட் ஆர். மாண்ட்கோமெரி, குறைந்த ஊட்டச்சத்து மதிப்பின் முக்கிய ஆபத்துகளில் ஒன்று - நமது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதே ஆகும் என்கிறார். அவரைப் பொறுத்தவரை, "ஊட்டச்சத்து குறைவதால், நாள்பட்ட நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கத் தேவையான கூறுகள் நம் உடலுக்கு மிகவும் குறைவாகவே கிடைக்கும்.
யாருக்கெல்லாம் ஆபத்தின் அளவு அதிகமாக உள்ளது? சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்த நிபுணர் கிறிஸ்டி எபி, இது குறித்து விளக்குகையில், “உலகம் முழுவதும் உட்கொள்ளப்படும் கலோரிகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை கோதுமை மற்றும் அரிசி தான். இந்த தானியங்களை பெரிதும் நம்பியிருக்கும் எவரும் - குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மக்கள் - புரதம், பி வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் நுகர்வு குறைவதால் உடல்நல பாதிப்புகளை சந்திக்கலாம். மேலும் இது பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை போன்ற குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்" என்கிறார்.
மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப, பழங்கள் மற்றும் காய்கறிகள் சார்ந்த உணவு முறைகளுக்கு மாறுமாறு மருத்துவர்கள் அடிக்கடி அறிவுறுத்துவது ஒருபக்கம் இருக்க, பால் மற்றும் இறைச்சியை உட்கொள்ளும் நபர்களுடன் ஒப்பிடுகையில், தாவர அடிப்படையிலான உணவை மட்டுமே சார்ந்து இருப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதும் நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது.