சுவையான அதே சமயம் சத்தான வெப்பமண்டல பழமாக இருக்கும் அன்னாசியில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பல நன்மைகள் தரும் என்சைம்கள் நிறைந்துள்ளன. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, எடை இழப்பு உள்ளிட்ட பல நன்மைகள் அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கின்றன. தவிர அன்னாசியில் நோய்களை எதிர்த்து போராட உதவும் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், ஜிங்க் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
இதிலிருக்கும் வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க, மாங்கனீஸ் ஆரோக்கியமான வளர்சிதை மாற்ற விகிதத்தை ஊக்குவிக்க உதவுகிறது. பல ஊட்டச்சத்துக்கள் அன்னாசி பழத்தில் இருந்தாலும் மாங்கனீஸ் & வைட்டமின் ஏ உள்ளிட்டவை இந்த பழத்தை மிகுந்த ஆரோக்கியமானதாக பட்டியலிட காரணமான முக்கிய ஊட்டச்சத்துக்களாகும். அன்னாசிப்பழத்தை உங்கள் டயட்டில் அடிக்கடி சேர்த்து கொள்வதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
செரிமான ஆரோக்கியம் : நம்முடைய உணவு முறையே ஒரே நேரத்தில் இனிப்பு, புளிப்பு, காரம் என பல சுவையான உணவுகள் அடங்கியது. இதனால் நீங்கள் மந்தமாக மற்றும் நெஞ்செரிச்சலாக உணரலாம். சாப்பிட்ட உணவை ஜீரணிக்க முடியாமல் நீங்கள் திணறினால், வயிற்றில் வலி அல்லது அசௌகரியத்தை உணர்ந்தால் சில பீஸ் அன்னாசி அல்லது அன்னாசி ஜூஸ் அருந்துவது நிலைமையை கட்டுப்படுத்த உதவும். அன்னாசிப்பழத்தில் காணப்படும் ப்ரோமிலைன் என்சைம், டயட்டரி ஃபைபர் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவை வயிற்றுப்போக்கு அபாயத்தை குறைத்து ஆரோக்கிய செரிமானத்திற்கு உதவுகின்றன.
வலுவான எலும்பு : ஆய்வுகளின்படி அன்னாசிப்பழத்தில் காணப்படும் ஏராளமான மாங்கனீஸ் நம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக பராமரிக்க மற்றும் எலும்புகளை வலுவாக வைக்கவும் அன்னாசிப்பழத்தை உங்கள் டயட்டில் வழக்கமாக சேர்த்து கொள்ளுங்கள். மாங்கனீஸுடன் இணைந்து அன்னாசியில் இருக்கும் ஜிங்க், காப்பர் மற்றும் கால்சியம்எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் : ஹை ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அடங்கிய உணவுகள் மற்றும் ரத்த செறிவுகள் (blood concentrations) கேன்சர் அபாயத்தை குறைப்பதாக, தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. அத வகையில் அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை நம் உடல் நோய்களை சிறப்பாக எதிர்த்துப் போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது அன்னாசிப்பழம்.
எடையை குறைக்க உதவுகிறது : நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வொன்றில், உடலில் கொழுப்பு உருவாவதை குறைக்க மற்றும் கொழுப்புச் சிதைவை (Fats breakdown) அதிகரிக்க அன்னாசி ஜூஸ் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தவிர அன்னாசிப்பழத்தில் காணப்படும் புரோமெலைன் என்ற நொதி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் கெட்ட கொழுப்பை எரிக்கிறது.