லேசான இனிப்புச் சுவை கொண்ட கேரட், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமானது. குறிப்பாக, இதை சமைத்து சாப்பிடுவதைக் காட்டிலும், ஸ்நாக்ஸ் போல பச்சையாகவே சாப்பிடுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியமாக இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் ஒரு தனித்துவம் மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். சில உணவுப் பொருட்கள் ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை அளிப்பதாக அமையும். அத்தகைய உணவுகளில் ஒன்றுதான் கேரட்.
கல்லீரல் பாதுகாப்பு : உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய கல்லீரலின் நலனை காக்க நீங்கள் கேரட் சாப்பிடலாம். இதில் உள்ள பீடா கரோடீன் மற்றும் ப்ளேவோனாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் கல்லீரலின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். கேரட் மென்று திண்பதற்கு உங்களுக்கு கடினமாகவோ அல்லது பிடிக்காமலோ இருந்தால், அதை நீங்கள் ஜூஸ் போல எடுத்துக் கொள்ளலாம். சில கேரட்களில் பச்சை வாசம் வீசும். இதைப் போக்குவதற்கு கொஞ்சம் இஞ்சி, மிளகுத்தூள் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
புற்றுநோய் தடுப்பு : கேரட்டில் பல்கோரினால் என்ற பொருள் உள்ளது. இது, புற்றுநோய் மருந்துகள் மற்றும் கதிரியக்க சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கிறது. உங்கள் சருமத்தில் திசுக்களை சீரமைக்கவும் இது உதவும். தினசரி கேரட் சாப்பிடுவதால், புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதில் இதன் பங்கு மிக முக்கியமானதாகும். நீங்கள் கேரட் சாப்பிடும்போது, அதன் தோல் மீது கிருமிகள் இருக்கக் கூடும் என்பதால், அதை அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது.
நீரிழிவு கட்டுப்பாடு : நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகளின் பட்டியலில் கேரட்டுக்கும் இடம் உண்டு. இது உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவுகளை அதிகரிக்காது. நார்ச்சத்து மற்றும் விட்டமின் ஏ ஆகியவை நிறைந்துள்ளதால், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதேசமயம், நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கட்டாயமாக கேரட்டை ஜூஸ் போல எடுத்துக் கொள்ளக் கூடாது. மென்று, சவைத்து தான் சாப்பிட வேண்டும். இருப்பினும், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், எப்போதாவது ஜூஸ் அருந்திக் கொள்ளலாம்.
பிற பலன்கள் மற்றும் எச்சரிக்கை : கேரட் சாப்பிடுவதால் உங்கள் கண் பார்வை திறன் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் பளபளப்பாகும். இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகமாக கேரட் சாப்பிடும்போது, அதில் உள்ள பீடா கரோடின் உங்கள் ரத்த நாளங்களில் நச்சுக்களை உருவாக்கும். சருமத்திற்கு நல்லதுதான் என்றாலும் கூட, மிக அதிகமாக உட்கொண்டால் உடலில் நிறமாற்றம் பிரச்சினை ஏற்படக் கூடும்.