உடலில் தேங்கி இருக்கும் கழிவு மற்றும் நச்சுக்களை அவ்வப்போது நீக்குவது என்பது டீடாக்ஸ் என்று கூறப்படுகிறது. டீடாக்ஸ் என்று சொன்னாலே நாம் என்ன உணவை எடுத்துக்கொள்கிறோம் என்பதை கவனித்து, மாற்ற வேண்டும். உணவு பழக்கத்தை மாற்றினாலே உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் பெரும்பாலும் நீங்கிவிடும். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், உணவு டிடாக்ஸ் என்று சொல்லும் பொழுது ஒரு சில உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் மற்றும் ஒரு சில உணவுகளை சாப்பிடலாம். நீங்கள் டீடாக்ஸ் செய்ய விரும்பினால் எந்த விதமான உணவுகளை சாப்பிடலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவுகள் மட்டும் இருக்கும் ஒரு டயட் என்பதும், ஜங்க் ஃபுட் இருக்கும் ஒரு டயட் என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றன. ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்றால் அது உங்கள் உடலில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதற்கு, ஏற்கனவே உடலில் தங்கியிருக்கும் ஜங்க் உணவுகளை நீங்கள் வெளியேற்ற வேண்டும். இதற்கு ஒரு டிடாக்ஸ் அதாவது உடலில் நச்சு நீக்கும் உணவு பழக்கம் மிக மிக அவசியம். இந்த டீடாக்ஸ் டயட்டை நீங்கள் பின்பற்றினால், உங்கள் செரிமானம் மேம்பட்டு உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் நீங்கும்.
உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க வேண்டும் என்று கூறும்போதே முதலில் நினைவுக்கு வருவது கிரீன் டீ தான். அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் இதில் அபரிமிதமான ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதில் காஃபின் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்களின் கலவை, கொழுப்பை எரித்து உங்களுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து, நச்சுக்களை நீக்கி எடை குறைக்கவும் உதவுகிறது.
உடலில் உங்கள் ஒட்டுமொத்த செரிமானம் உறுப்புகளையும், செரிமான அமைப்பையுமே வியக்கும் வகையில் மேம்படுத்தக் கூடிய ஒரு பழம் இருக்கிறது. அதன் பெயர் வெண்ணெய் பழம். பொதுவாக அவகோடா என்று கூறப்படும் இந்தப் பழம், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. ஃபேன்சி உணவுகளை விரும்புபவர்களுக்கு வெண்ணை போன்ற தன்மை மற்றும் சுவையில் இருக்கும் இந்த பழம் மிகப்பெரிய மாற்றாக அமையும். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், மக்னீசியம், ஏகப்பட்ட நார்ச்சத்து, ஆகியவை உள்ளன.
உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க விரும்புபவர்கள் ஃபெர்மென்ட் செய்யப்பட்ட உணவுகளான கிம்ச்சி, கொம்புச்சா உள்ளிட்டவைகளை சாப்பிடலாம். அதேபோல புளிக்க வைக்கப்பட்ட தயிர், மோர் மற்றும் ஐஸ் பிரியாணி என்று கூறப்படும் பழைய சாதத்தையும் சாப்பிடலாம். இவை உங்களுடைய வயிறு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும்.