நாம் அனைவருக்குமே காயங்கள் ஏற்பட்டிருக்கும். தோலை துளைக்கும் ஒரு வெட்டு, கீறல் அல்லது ஆழமான காயங்கள் என பலவற்றால் அவதிப்பட்டிருப்போம். ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான காயங்கள் சுத்தமாகவும், தொற்று இல்லாமல் இருக்கும் போது விரைவாக குணமாகும். மற்ற வகை காயங்கள் மிகவும் தீவிரமானவை மற்றும் எளிதில் ஆறாது.
ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அது சீக்கிரம் குணமாக மூன்று விஷயங்கள் உதவுகின்றன. ஒன்று நல்ல ஆரோக்கியமான உணவு, இரண்டாவது மருந்து, மூன்றாவது போதுமான அளவு ஓய்வு. உடல்நிலை சரியில்லாமல் போகும் போது அல்லது காயமடையும் போது சாப்பிடுவது ஒரு பெரிய வேலை தான். ஆனால் குணமாகும் செயல்முறையை விரைவுபடுத்த கூடிய பல உணவுகள் உள்ளன.
இனிப்பு உருளைக்கிழங்கு: ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்ஸ் காயங்களில் இருந்து விரைவாக குணமடைய உதவும். அந்த வகையில் இனிப்பு உருளைக்கிழங்கு ஒரு ஆரோக்கியமான, சத்தான கார்போஹைட்ரேட் மூலமாகும்,. மேலும் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு தாவர கலவைகள் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு காயங்களில் இருந்து உடலை விரைவாக மீட்க உதவுகிறது.
நெய்: தீக்காயங்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க பசு நெய் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத பாரம்பரிய நூல்களின்படி காயங்கள், வலிமிகுந்த புண்கள், பூச்சி கடித்த காயங்கள், தொழுநோய், வெப்பம் அல்லது நெருப்பினால் ஏற்படும் காயங்கள், ஆழமான காயங்களுக்கு நெய் அடிப்படையிலான கலவை பயனுள்ளதாக இருக்கும். ஆய்வுகளின்படி காயங்களை மூடுவதற்கு நெய் உதவுகிறது மற்றும் காயத்தை சுற்றியுள்ள செல்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது.
பச்சை இலை காய்கறிகள்: கீரை மற்றும் காலே போன்ற பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் சி, மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் உள்ளிட்டவை அதிகம் உள்ளன். இவை அனைத்தும் நம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமானவை. வைட்டமின் சி காயங்களில் இருந்து வேகமாக குணமடைய உதவுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின் பச்சை இலைக் காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரை.
நட்ஸ்: நட்ஸ்களில் துத்தநாகம், வைட்டமின் ஈ, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிரம்பி உள்ளன. இவை அனைத்தும் உடலில் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்பட்டு செல்லுலார் சேதத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. பாதாம், வால்நட், அக்ரூட் பருப்புகள் மற்றும் பெக்கன் போன்ற நட்ஸ்கள் காயங்களில் இருந்து மீளும் காலத்தில் ஆற்றலை வழங்குகின்றன.