என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒவ்வொரு உணவையும் எந்த அளவு சாப்பிடலாம் என்பதும் முக்கியம். உதாரணமாக, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைந்த அளவில் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை குறையும். எனவே, நீங்கள் என்ன உணவுகளை சாப்பிடுகிறீர்கள், என்ன அளவில் சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கண்காணித்து வருவது நீரிழிவு நோயை எளிதாக கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதே போல, பாலிஷ் செய்யப்படாத அரிசி, முழு தானிய வகைகள், முழு கோதுமை மற்றும் சிறு தானிய வகைகள் ஆகிய உணவுகள் குறைந்த கிளைகெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகள். இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்க உதவும்.
தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பீன்ஸ், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும். பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் குறைந்தது ஒரு கீரை மற்றும் பச்சை காய்கறியாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டுக் காய்கறிகளான வெண்டை, கத்திரி, பூசணி, சுரைக்காய், அவரை, புடலை போன்ற காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.
கீரை மற்றும் பச்சை காய்கறிகளில் அதிக நார்ச்சத்து இருக்கின்றது. இந்த உணவுகளை நீங்கள் அதிகம் சாப்பிடும் போது, உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், மணிக்கணக்கில் பசி எடுக்காமல் வைத்திருக்கும். நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் முறிவின் வேகத்தை குறைக்கிறது, இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். நார்ச்சத்து எளிதில் செரிமானம் ஆகாது, எனவே அடிக்கடி பசிக்கிறது என்ற உணர்வு தோன்றாது. நார்ச்சத்து உணவுகளை சாப்பிடும் போது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.