பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு அதிக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதே போன்று கார்போஹைடிரேட் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள்ள கூடாது என்று அறிவுறுத்துவார்கள். கார்போஹைடிரேட் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும், இதனால் எடையும் கூடும் என்று சொல்வதை கேட்டிருப்போம். ஆனால், இது எல்லா வகையான கார்போஹைடிரேட் நிறைந்த உணவுகளுக்கும் பொருந்தாது.
வாழைப்பழம் : நீர்சத்து, கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் சர்க்கரை ஆகிய ஊட்டச்சத்துக்கள் வாழை பழத்தில் நிறைந்துள்ளது. ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் தோராயமாக 27 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இருப்பினும், இது எளிதில் ஜீரணிக்கக்கூடிய எதிர்ப்புத் திறன் கொண்ட கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. எனவே உடற்பயிற்சிக்குப் பின் அல்லது உடற்பயிற்சிக்கு முன் இதை சாப்பிட்டால் உடனடி ஆற்றலைத் தருகிறது.
உருளைக்கிழங்கு : உங்கள் தசைகளை வலுவாக்க நினைத்தால், இன்சுலின் அளவை அதிகரிக்கச் செயல்படும் உணவுகளை நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும். அத்தகைய உணவு வகையை சேர்ந்தது தான் உருளைக்கிழங்கு. இதை குறைந்த அளவில் சாப்பிடும்போது உடலுக்கு கேடு தராது. இவை வேகமாக செயல்படும் கார்போஹைட்ரேட்டுகள் என்பதால் தினமும் சிறிதளவு மசித்த உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பருப்பு வகைகள் : புரத சத்தானது பருப்பு வகைகளில் அதிகம் இருந்தாலும், அவற்றில் கார்போஹைட்ரேட்டும் உள்ளன. இருப்பினும், இவை நல்ல கார்போஹைட்ரேட் வகையை சேர்ந்தவை. உங்கள் மதிய உணவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இவை எளிதில் ஜீரணிக்கக் கூடியவை. மேலும் இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
பீன்ஸ் : பருப்பு வகைகளைப் போலவே, பீன்ஸிலும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளன. ஃபைபர், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கருப்பு பீன்ஸ் அல்லது கிட்னி பீன்ஸ் போன்றவை தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும் இதிலுள்ள நார்சத்து செரிமானத்திற்கு பெரிதும் உதவும். எனவே இவற்றை உணவில் அவசியம் சேர்த்து கொள்ளலாம்.
நட்ஸ் : பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகள் மிகவும் ஆரோக்கியமானவை. இதில் கார்போஹைட்ரேட், நார்சத்து மற்றும் ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதை சாப்பிட்டு வந்தால் தசைகளுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி செய்து வருவோருக்கு இது அவசியம் தேவைப்படும். அதே போன்று உடல் எடையை குறைப்போரும் இதை சாப்பிட்டு வரலாம். இவை இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்.