பெண்களின் உடல் நலனுக்கு ஜவ்வரிசி மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், அதைப் போல மோசமான உணவு ஒன்று கிடையாது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஜவ்வரிசியில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது குறித்தும், அதில் பெண்களுக்கு கிடைக்கும் ஹார்மோன் பேலன்ஸ் குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பல்வேறு விளக்கங்களை கொடுக்கின்றனர். ஆனால், அவை தவறானவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எது எப்படியாயினும், நம் உணவில் எப்போதாவது நாம் ஜவ்வரிசி சேர்த்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். குறிப்பாக விசேஷ தினங்களில் பாயசம் செய்து அதனை சாப்பிடுகிறோம். இத்தகைய சூழலில் ஜவ்வரிசி என்றால் என்ன, எதில் இருந்து அது உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படியெல்லாம் சாப்பிடலாம், அதன் சத்துக்கள் என்ன என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
ஜவ்வரிசி கிச்சடி : இப்படி ஒரு உணவை தென்னிந்திய மக்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், வட மாநிலங்களில் விரதம் இருக்கும் தினங்களில் பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை தவிர்க்கின்றனர். அத்துடன் ஜவ்வரிசி கிச்சடி செய்து காலை உணவாக உட்கொள்கின்றனர். நிறைந்த மாவுச்சத்து கொண்ட ஜவ்வரிசி உணவானது, விரத நாட்களில் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கக் கூடியது.
இது இயற்கையான உணவா? : இல்லை. ஜவ்வரிசி என்பது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஆகும். இது மரவள்ளிக் கிழங்கில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து, மாவு போல மாற்றுகின்றனர். பின்னர் நச்சுக்களை நீக்கி, இயந்திரத்தில் சின்ன, சின்ன முத்து போல உருமாற்றுகின்றனர். அதற்குப் பிறகு நீராவியில் வேக வைத்து, வெள்ளை ஜவ்வரிசியாக மாற்றப்படுகிறது.
மருத்துவர்கள் இதுகுறித்து கூறுகையில், “ஜவ்வரிசி என்பது நேரடி உணவு கிடையாது. அது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள். ஜவ்வரிசியை முற்றாக தவிர்க்க வேண்டியது கிடையாது. ஆனால், எப்போதாவது சாப்பிடும் சமயங்களில், அன்றைய தினம் எஞ்சியுள்ள நேரத்தில் சீரான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.