தினசரி சூடாக ஒரு கப் கிரீன் டீ குடித்தால் அது நமது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாகவும், உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று பலரும் நம்புகின்றனர். அவ்வாறு கிரீன் டீயுடன் இஞ்சி, தேன், எலுமிச்சை சாறு, மூலிகைகள், பழங்கள் போன்ற பல விதமான உப பொருட்களை சேர்த்தும் கிரீன் டீயை குடிக்கலாம்.
சில உணவு வகைகளை நாம் உட்கொள்ளும்போது அவை கொண்டிருக்கும் கலோரிகளை விட அவற்றை செரிமானம் செய்வதற்கு அதிக கலோரிகளை செலவு செய்ய வேண்டியது இருக்கும். இதன் காரணமாக நமது உடல் எடை சிறிதளவு குறைய வாய்ப்புகள் உண்டு ஆனால் இதுவும் ஒரு எல்லை வரை தான் வேலை செய்யும். கிரீன் டீயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் பெனோல் ஆகியவை இந்த விளைவை உண்டாக்குகின்றன. ஆனால் தினமும் இரண்டு கப் அளவிற்கு கிரீன் டீ மட்டுமே குடிப்பது உடல் எடையை குறைக்க உதவாது.
அப்படி என்றால் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்? அடிப்படையிலேயே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவை குறைக்க வேண்டும் அல்லது நீங்கள் செலவழிக்கும் சக்தியின் அளவை அதிகரிக்க வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடையை குறைப்பதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கலோரி பற்றாக்குறை : ஒரு நாளைக்கு நீங்கள் செலவழிக்கும் சக்தியின் ஒட்டுமொத்த அளவைவிட, நீங்கள் உட்கொள்ளும் கலோரியின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்கள் உடலானது உங்கள் உடலில் தேங்கி இருக்கும் அதிக கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இதற்காக நீங்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரிவிகித உணவு : நாம் உண்ணும் உணவிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியமானது. குறிப்பாக உடல் எடை குறைப்பிற்காக நாம் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் போது நம் உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் நிறைந்துள்ள வகையில் உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் குறைவான உணவை உட்கொண்டாலுமே உங்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஏற்படாது.