கோடை காலத்தில் நம்மை குளு, குளுவென வைத்துக் கொள்ள இளநீர், நுங்கு, தர்பூசணி என பலவற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், சூட்டை கிளப்பக் கூடியது என்று தெரிந்தும் இந்த கோடை காலத்தில் நாம் மனம் விரும்பி எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது மாம்பழம் தான். ‘முக்கனி’ என்று தமிழர்கள் கொண்டாடும் இந்தப் பழத்தை நாம் கைவிட முடியுமா?
ஏப்ரல், மே மாதங்களை உள்ளடக்கிய கோடைகாலத்தில் மட்டுமே பெருமளவில் விளையக் கூடிய இந்த அற்புத கனியை நாம் தவறவிடுவதில்லை. பச்சை மாங்காயை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடாத இளமைக் காலம் யாருக்குமே இருக்க முடியாது. வாய் கூசினாலும், வயிறு எரிச்சல் அடைந்தாலும் இந்தப் பழக்கத்தை நாம் கைவிடுவதில்லை.
உங்கள் அளவை குறைத்துக் கொள்ளுங்கள் : அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியானது அமுதப் பழமான மாம்பழத்திற்கும் பொருந்தும். மாம்பழத்தில் எண்ணற்ற நுண் சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இருப்பினும் இதில் கலோரிகள் மிக அதிகம். ஆக, உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் நீங்கள் உணவை முற்றிலுமாக தவிர்த்தாலும் கூட, மாம்பழத்தை ஒரு பிடி, பிடித்தீர்கள் என்றால் எந்தப் பலனும் கிடையாது.
உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் : சுவையான மாம்பழத்தை துண்டு, துண்டாக நறுக்கி அதை உணவுக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்திக்கொள்ளும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஏற்கனவே நீங்கள் வயிறு நிரம்ப சாப்பிடும் நிலையில், கலோரிகளில் உயர்வான மாம்பழத்தையும் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். ஆகவே உணவுடன் அல்லது சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாம்பழம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம் : கலோரி அதிகம், கலோரி அதிகம் என்று சொல்லி பயமுறுத்துவதைப் பார்த்தால் மாம்பழமே சாப்பிடக்கூடாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழக் கூடும். நிச்சயமாக சாப்பிடலாம். நீங்கள் வழக்கமாக சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளுக்குப் பதிலாக மாம்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை பெறுவதற்கு மாம்பழம் எடுத்துக் கொள்ளலாம்.
பழமாகவே சாப்பிடவும் : மாம்பழத்தை கையில் பிடித்து, அதன் சாறு ஒழுக சுவைத்து சாப்பிடும் சுகமே தனிதான். ஆனால், கூடுதல் தித்திப்பாக இருக்க வேண்டும் என்பதற்காவும், நாகரீகம் கருதியும் இன்றைக்கு பலர் மாம்பழங்களை ஜூஸ் போல தயாரித்து அருந்துகின்றனர். இதனால் அதிலுள்ள நார்ச்சத்துக்களை இழக்க நேரிடும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு துரிதமாக எகிறும். ஆகவே, பழத்தை நேரடியாகவே சாப்பிட வேண்டும்.