நவீன உணவு முறைகளை தவிர்த்து, இயற்கை சார்ந்த உணவுகளை உண்ணும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்றவைகள் அனைத்து நகரங்களிலும் தாராளமாக கிடைத்து வருகிறது. நம் மனதில் அடிக்கடி எழக்கூடிய கேள்வி, இயற்கை சார்ந்த உணவு வகைகளில் எது சிறந்தது என்று.இன்று நாம் பார்க்கப்போவது கூட அப்படிப்பட்ட உணவு வகையைத்தான். நாம் பார்க்கக்கூடிய மூன்று முக்கியமான பொருட்கள் குயினோவா, கூஸ்கஸ் மற்றும் அமராந்த். இவற்றின் நன்மைகள் என்ன என்பதை இங்கு காண்போம்.
குயினோவாவின் நன்மைகள் : ஒரு கப் சமைத்த குயினோவாவில் 39 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 8 கிராம் புரதம், 4 கிராம் கொழுப்பு, 5 கிராம் ஃபைபர் மற்றும் 222 கலோரிகள் உள்ளன. ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில் அத்தியாவசியமான 9 அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த மாற்று உணவாகும். இதை சாப்பாடு வகையாகவோ அல்லது பழச்சாறு போல அரைத்தும் குடிக்கலாம்’ என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
கூஸ்கஸின் நன்மைகள் :1 கப் சமைத்த கூஸ்கஸில் 37 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் புரதம், 0.3 கிராம் கொழுப்பு, 2.2 கிராம் ஃபைபர் மற்றும் 176 கலோரிகள் இருக்கிறது. இது குயினோவாவை விட குறைவான கலோரிகளையும் கொழுப்பையும் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இது குயினோவாவை விட மிகவும் ஆரோக்கியமானது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதைவைத்து சாலட், சூப், கட்லெட்டுகள் போன்றவற்றையும் தயாரிக்கலாம்.
அமராந்தின் நன்மைகள் : 100 கிராம் சமைத்த அமராந்தில் 103 கலோரிகள், 19 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 2 கிராம் உணவு நார் மற்றும் 2 கிராம் கொழுப்பு உள்ளது. இது வைட்டமின் சி-யின் ஆதார உணவு வகையாகும். மேலும் இது, இரத்த நாளங்களை அதிகரிக்கவும், தசை திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது.இதில் இரும்புச்சத்து உள்ளது. புரதம், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இதனை லட்டு, கட்லெட் மற்றும் சாலட் செய்தும் சாப்பிடலாம். இத்தகைய தானியங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது ஆகும். இதனை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.