முட்டையில் கெட்ட கொழுப்புகள் உண்டா ? : முட்டையில் கொழுப்பு அதிகம் என்பது உண்மை தான். அதுமட்டுமல்லாமல் வைட்டமின், மினரல்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு போன்றவையும் உண்டு. பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், மிதமான அளவில் சோடியம், காப்பர், ஐயோடின், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் முட்டையில் உண்டு. ஆக, இத்தனை சத்துக்களை கொண்ட முட்டையை நீங்கள் சாப்பிடவில்லை என்றால், அதையெல்லாம் நீங்கள் இழக்க நேரிடும்.
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் : நம் உடலுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்க நாளொன்றுக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் போதுமானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எத்தனை முட்டை சாப்பிடுகிறோம் என்பதை விட, அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது. முட்டையை அவித்து சாப்பிடுவதும், அதிக எண்ணெய் சேர்க்காமல் ஆம்லெட் வகையில் சாப்பிடுவதும் சரியானதுதான். ஆனால், பட்டர், சீஸ், சாஸ் போன்றவற்றோடு சேர்த்து சாப்பிட்டால், முட்டையை காட்டிலும் இதிலுள்ள கொழுப்புகள் அதிகமாக இருக்கும்.
வாரத்திற்கு 5 முட்டை சாப்பிடலாம் : அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், முட்டை சாப்பிடுவதன் மூலமாக ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை போன்றவை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற வகையில் கொழுப்பு கொண்ட உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் முட்டை சேர்ப்பதால் அபாயம் ஒன்றும் கிடையாது. வாரம் 5 முட்டைகள் வரையிலும் கூட சாப்பிடலாம்.
அதிக கொலஸ்ட்ரால் கொண்டவர்கள் முட்டை சாப்பிடலாமா ? : நிச்சயமாக இது கவனிக்கத்தக்க விஷயம். ஏனென்றால் முட்டையின் மஞ்சள் கருவில் மிகுதியான கொழுப்புகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்கள் அதை தவிர்த்து விடுவதுதான் சிறப்பானது. ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் மஞ்சள் கருவை கட்டாயம் தவிர்த்து விடலாம்.
அவித்த முட்டையா, ஆம்லெட்டா : முட்டையை அதிகம் வேக வைக்காமல் சாப்பிட்டால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும் என்றொரு நம்பிக்கை உள்ளது. இதனால் தான் பலரும் ஆஃபாயில், ஆம்லெட் போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர். அதிகம் எண்ணெய் சேர்க்காமல், குறைவான தீயில் சமைத்தால் முட்டையை எப்படி சாப்பிட்டாலும் ஓகே தான்.