இனிப்பு என்றால் பச்சிளம் குழந்தை முதல் பல் கொட்டிய பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது தானே! யாருக்கு தான் இனிப்பு பிடிக்காது. ஆனால், சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையை தான் நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறோம். இது எந்த அளவுக்கு இனிப்பானதோ, அதே அளவுக்கு நம் உடல் நலனுக்கு கேடு தருவதாகவும். நாம் மெய்மறந்து சுவைக்கும் ஐஸ்கிரீம், குலோப் ஜாமூன், கோலா பானங்கள் போன்றவற்றில் இந்த வகை சர்க்கரை அதிகம் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும்.
வெள்ளை சர்க்கரையை தொடர்ந்து பயன்படுத்தும்போது நாளடைவில் நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவ்வளவு ஏன் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை ஏற்படுவதற்கும் கூட இந்த சர்க்கரை காரணமாக இருக்கிறது. வளர் இளம் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கக் கூடியதாக இது உள்ளது. ஆகவே, இதற்கு மாற்றான இயற்கையான சில இனிப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நாட்டுச் சர்க்கரை : அரக்கு நிறத்தில் காணப்படும் நாட்டுச் சர்க்கரை தான் இன்றைய தினம், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. இதுவும் கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் இதில் ரசாயனங்கள் சேர்க்கபடுவதில்லை என்பதால் அதன் இயற்கை தன்மை மாறாமல் இருக்கிறது. கூலிங் மற்றும் சூடான பானங்களுக்கு இனிப்பூட்ட இதை சேர்த்துக் கொள்ளலாம்.
வெள்ளம் : இதுவும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுவது தான். அதே சமயம், விலை குறைவாகவும் கிடைக்கும். பலகாரங்கள், டீ, காஃபி போன்ற அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கற்கண்டு வகையிலும் கிடைக்கிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதால், ஜிம் செல்லும் நபர்கள் இதை பெரிதும் விரும்புகின்றனர்.
மலைத் தேன் : தேன் கூடுகளில் இருந்து நேரடியாக அறுவடை செய்யப்பட்ட தேன் இப்போது சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. எந்த வகையிலும் பிராசஸ் செய்யப்படாத, இயற்கையான இந்த தேன் நமக்கு ஸ்வீட்னராகப் பயன்படும். கால வரையறையின்றி எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இதை பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.