அனைத்து வகையான ஊட்டச்சத்துகள் நிரம்பிய சீரான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நம் அனைவரது விருப்பமாக இருக்கும். அதே சமயம், பச்சை காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை பச்சையாக, சமைக்காமல் சாப்பிட்டால் உடலுக்கு மேலும் நன்மை கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம். அது உண்மை தான் என்றாலும் சில வகை காய்கறிகள் மற்றும் உணவுகளை நாம் அதுபோல சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வீட்டில் சமைக்க வைத்திருக்கும் கேரட், தக்காளி போன்றவற்றை நம்மில் பலர் எடுத்து பச்சையாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். சிலர் உருளைக் கிழங்கு, பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் கூட பச்சையாக சாப்பிடுவார்கள். இவற்றில் எதையெல்லாம் அப்படியே சமைக்காமல் சாப்பிடக் கூடாது என்பதையும், ஏன் அப்படி சாப்பிடக் கூடாது என்பதையும் இந்தச் செய்தியில் பார்க்கலாம். குறிப்பாக, முழுமையாக வேக வைக்கப்படாமலும் ஒரு சில உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது.
ஹாட் டாக்ஸ் : ஹாட் டாக்ஸ் என்பது நறுக்கிய பன் எடுத்து கிரில் செய்யப்படும் ஒரு உணவு ஆகும். தென்னிந்தியர்களின் உணவுக் கலாசாரத்தில் இது அதிகம் இல்லை என்றாலும் கூட, வெளிநாடுகளில் வசிக்கக் கூடிய நம் மக்கள் சிலர் இதை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இருப்பார்கள். குறிப்பாக, இது பேக் செய்யப்பட்ட உணவாகவும் விற்பனைக்கு வருகிறது. இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, குடல் நலன் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கு எவ்வளவு சுவையானது என்பதையும், அது நம் எல்லோருக்கும் எவ்வளவு பிடிக்கும் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம் வீடுகளில் வழக்கமாக சமைக்கப்படும் உணவு தான் இது. உருளைக் கிழங்கை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். ஆனால், பச்சையாக மட்டும் சாப்பிடக் கூடாது. உருளைக் கிழங்கில் அதிகப்படியான ஸ்டார்ச் சத்து நிரம்பியுள்ளது. அதை பச்சையாக எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்திற்கு சிக்கல் ஏற்படும். இது மட்டுமல்லாமல் வயிறு உப்புசம் பிரச்சினை ஏற்படும். இதை பச்சையாக சாப்பிடும் போது, அதில் நஞ்சுப் பொருட்கள் நம் உடலில் ஃபுட் பாய்ஸன் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும்.
ஆப்பிள் : நம் எல்லோருக்கும் பிடித்தமானது. நினைத்த நேரத்தில் சாப்பிடக் கூடியது. இதை பச்சையாகத் தான் சாப்பிட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஆப்பிள் சாப்பிடுகிறேன் என்ற பெயரில், அதை முழுமையாக அப்படியே சாப்பிட்டு விடக் கூடாது. ஆப்பிளில் உள்ள கொட்டைகளை நீக்கிய பிறகே அதை சாப்பிட வேண்டும். தவறுதலாக இதை சாப்பிட்டாலும் சிக்கல் தான். ஆப்பிள் விதைகளில் உள்ள ரசாயனமானது சையனைடு உற்பத்திக்கு வழிவகுக்கும்.
ராஜ்மா : மாலை நேரத்தில், அவித்த ராஜ்மா சுண்டல் நமக்கு நல்ல ஸ்நாக்ஸ் தேர்வாக இருக்கும். ஆனால், இதை நீங்கள் பச்சையாக சாப்பிடும் பட்சத்தில் உடலில் நஞ்சு ஏற்படும். வயிறு உப்புசம், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதை 4, 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதற்கு பிறகு வேக வைத்துதான் சாப்பிட வேண்டும்.
மரவள்ளிக் கிழங்கு : மரவள்ளிக் கிழங்கை அவித்து சாப்பிடுவது குழந்தைகளுக்கு பிடித்தமான விஷயமாக இருக்கும். சில சமயங்களில் வீட்டில் இதை வாங்கி வந்த பிறகு, சமைக்க தாமதம் செய்தால், பொறுமை இழந்து நாம் அதை பச்சையாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஆனால், வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடும் பட்சத்தில் அது சையனைடு ரசாயனமாக மாறும். ஆகவே, இதை தோல் உறித்து, கழுவி முறையாக வேக வைத்த பிறகே சாப்பிட வேண்டும்.