ஆரோக்கியமாக வாழ பல்வேறு விதமான உணவு முறைகளை நாம் பின்பற்றலாம். அப்படியான ஒரு உணவு முறைதான் சர்க்காடியன் ரிதம் உணவு முறை. இந்த உணவு முறையானது நம் உடல் உறுப்புகளின் பல்வேறு செயல்முறைகளுக்கு காரணமாக உள்ள சர்காடியன் ரிதத்திற்கு ஏற்ப ஒத்திசைக்கிறது. இந்த உணவு முறை உடலின் வளர்ச்சிதை மாற்றம், ஆற்றல் அளவுகள் மற்றும் தூக்கத்தின் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்த உணவு முறையை நீங்கள் பின்பற்ற விரும்பினால் ஒரு சில உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த உணவுகள் மூலமாக உடலின் சர்காடியன் ரிதம் ஒழுங்கமைக்கப்பட்டு, ஆற்றல் அளவுகள் அதிகரிக்கும். அதோடு தூக்கத்தின் தரம் மேம்படுவதால் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவும். அந்த வகையில் இந்த உணவு முறையில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில பின்வருமாறு:-
பச்சை இலை காய்கறிகள்: கீரை, கேல், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் இது ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக உதவுவதோடு, செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் சர்காடியன் ரிதத்தை ஒழுங்கமைத்து, தரமான தூக்கத்தை கொடுக்கும்.
முழு தானியங்கள்: பழுப்பு நிற அரிசி, கினோவா மற்றும் ஓட்ஸ் போன்றவை நார்ச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருப்பதால் இது ரத்தத்தின் சர்க்கரை அளவுகளை சீராக்க உதவும். மேலும் இவற்றை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. அதோடு முழு தானியங்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிக அளவில் கொண்டிருப்பதால் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், வால்நட், சியா விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை சரியான அளவுகளில் வைக்க உதவுகிறது. மேலும் நட்ஸ் மற்றும் விதைகளை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவது உடலின் சர்க்காடியன் ரிதத்தை பராமரிக்க உதவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
சிப்ஸ், பிஸ்கட், சோடா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் பிரிசர்வேட்டிவ்கள் அதிக அளவில் காணப்படுவதால் இது சர்காடியன் ரிதத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். அதோடு இது உடற்பருமன் மற்றும் பல்வேறு விதமான உடல்நல சிக்கல்களையும் உண்டாக்கும்.
மதுபானங்கள்: மதுபானங்கள் அருந்துவது ஆரம்பத்தில் உங்களுக்கு தூக்கத்தை வரவழைத்தாலும், இடையிடையே நீங்கள் விழித்துக்கொள்வதால், இது தூக்கத்தின் தரத்தை மோசமாக பாதிக்கும்.. முடிந்த அளவு மதுபானங்கள் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக படுக்கைக்கு செல்லும் பொழுது மதுபானங்கள் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.