நமக்கு பிடித்தமான உணவு என்று வரும்போது, அதில் பாஸ்தா போன்ற திருப்திகரமான உணவும் இடம்பெறும். ஸ்பாகெட்டி, டார்டெல்லினி, அல்லது லாசக்னா ஆகிய வேகவைத்த பாஸ்தா வகைகள் எல்லாமுமே நமக்கு பிடிக்கும். சரியான சாஸுடன் இணைந்து, காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து தயாரித்தால் மிக அற்புதமான சுவையை இது தரும். பாஸ்தாவை உலக அளவில் அதிக அளவிலான உணவுப் பிரியர்கள் சாப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில், தினமும் பாஸ்தாவை சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நியூகேஸ்ட்டில் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணரான எம்மா பெக்கெட் கூறுகையில், தினசரி பாஸ்தாவை சாப்பிடுபவர்கள் அதிக எடையைக் குறைக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாஸ்தாவை முழுவதுமாக சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக, பொதுமான அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்று பரிந்துரைக்கிறார். மேலும், முழுதானியத்தால் தயாரித்த பாஸ்தாவிற்கு மாறினால், அதன் பலனை இன்னும் உயர்த்தி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். பாஸ்தாவை சரியாக சாப்பிடுவதற்கான வழிகள் இதோ.
பாஸ்தாவில் காய்கறிகளை சேர்க்கவும் : சாலட்டின் சைட் டிஷ் உடன், உணவில் காய்கறிகள் உட்கொள்வதை அதிகரிக்க, பட்டாணி, பீன்ஸ், குடை மிளகாய், சோளம் போன்ற பல வகையான காய்கறிகளுடன் பாஸ்தாவைக் சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக இருக்கும். மேலும், நீங்கள் சாப்பிடும் பகுதியின் அளவில் எப்போதும் கவனமாக இருத்தல் முக்கியம். சில நேரங்களில் அதன் சுவை அருமையாக இருக்கிறது என்று அதிக அளவில் சாப்பிட்டு விடுவோம். இது மீண்டும் எடை உயர்வதற்கு வழி வகுக்கும்.
கொழுப்பைத் தவிர்க்கவும் : சீஸ் போன்றவற்றை அதிக அளவில் பாஸ்தாவில் சேர்த்து கொண்டு சாப்பிட வேண்டாம். ஒன்று பாஸ்தாவில் சீஸ் சேர்ப்பதைத் தவிர்க்கலாம் அல்லது சீஸை குறைவாக பயன்படுத்தலாம். இல்லையேல், இது உங்களின் உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கும். அதே போன்று, அதிக கொழுப்பு நிறைந்த வெண்ணெய், சமையல் எண்ணெய் போன்றவற்றையும் தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள்.
மெலிந்த இறைச்சி : காய்கறிகளுடன் புரதச்சத்து சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான உணவுமுறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பாஸ்தாவில் இறைச்சியைச் சேர்க்கும்போது, சுவை மாறாமல் இருப்பது போல, அவற்றின் கலோரிகள் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் வகையில் சமைக்க சரியான வழியை தேர்வு செய்து கொள்ளவும். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த வகையான ஆரோக்கியம் நிறைந்த இறைச்சியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.